திங்கள், 21 மார்ச், 2011

வசந்த காலங்கள் !!!

சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன.கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான். ஆமாம்! எனது ! மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை ,ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன்.அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே  என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும்.என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான்.அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன்.என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான்.படிப்பில் மட்டும் தான் போட்டி.மற்றும் படி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம்.பாடசாலையில் கூட ஜெபரீன்,ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும்.படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை.மாமிக்கும் ,மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும் .கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள்.இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!."என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?" என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன்."இல்ல....அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு.அதுதான் யோசிக்கிறேன்" என்றேன்."உம்மா கூடச் சொன்னாங்க....என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்" என்றார் மச்சான்.ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ் வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை.ஆனால் நெற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது.அதற்கு காரணமும் இருந்தது.எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள்.இதை என்னிடம் மாமி சொல்லிய போது ...நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன்.மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள்.அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை....எழுந்து நிற்கிறேன். "என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா...? இன்னும் யோசிக்கிறீங்களே! என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன்.இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள்.இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது.புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார்.மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் "மச்சான் படித்து விட்டு வரட்டுமே " என்று .அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது.மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின.என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார்."ஜெபரீன் ...! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம் .அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! " என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது.சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன் . நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது.ருவைஸ் வந்ததும் திருமணம் தான் ! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார்.எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன் .தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன்.நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது.என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது.என் விழிகள் மச்சானைத் தேடின."உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்."என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன்.என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன்  நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்..

ஞாயிறு, 20 மார்ச், 2011

உதவாத உள்ளம்!!!

"உம்மா...உம்மா...தாயே...? மிஸ்கீன் வந்திருக்கேன் உம்மா....ஏதாச்சும் ஹதியா தாங்கம்மா ..."குரல் கேட்டு முகம் சுழித்தவளாய் அவசரமாக விரைந்து வருகிறாள் றிபா."ஏய்...சனியனே...! இந்த விடி காலையில் உனக்கு என் வீட்டை  விட்டா அக்கம் பக்கம் வேறு வீடே  இல்லையா....?" "உனக்கு தர சில்லறை இல்லை. தொலைந்து எங்காவது போ" றிபாவின் இரக்கமில்லாத மனதையும்,முட்டாள் தன பேச்சையும் கேட்ட  அந்த ஏழை மாதுக்கு ஈட்டியால் குத்தியது போன்றிருந்தது.தாங்க முடியாத மனவேதனை! கண்ணீர் துளிகளாய் சிதறியது. இப்படியும் எம் சமூகத்தில் பெண்கள் இருக்கின்றார்களே! நீண்ட பேறு மூச்சுடன் வெளியானாள்.வீட்டுக்கு  யாசகம் கேட்டு வரும் ஏழைகளை வெறும் கையோடு திருப்பி அனுப்பாதீர்கள் என்று எமது மார்க்கம் சொல்லுகின்றதே! யா.. அல்லாஹ் பெண் மனசு மென்மையானது,இரக்கமானது என்று சொல்லுவார்களே...! ஆனால் இந்த பெண் மனசு வன்மையாகி விட்டதே! ஏழைக்கு உள்ள இதயம் கூட இந்த பணக்காரர்களிடம் இல்லையே! நீதான் இவர்களுக்கு நல்ல மனத்தைக் கொடுக்கனும் அல்லாஹ்! கவலை நிறைந்த இதயமுடன் போய்  கொண்டிருந்தாள். முன் ஹோலில் தூங்கிக் கொண்டிருந்த சில்மியின் காதுகளில் உம்மா றிபாவின் கொடுமையான வார்த்தைகள் தீயாய் விழுந்தன. "அடுத்தவன் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே" என்று எமது மார்க்கம் சொல்கிறது.ஆனால் எம் வீட்டில் நடப்பதோ எதிர் மாறானதே! நினைத்துப் பார்க்கவே அவன் கண்கள் கண்ணீரை வடித்தன.கேட்டு வந்த அந்த ஏழையை ஏசி விரட்டி விட்டாங்களே உம்மா! எவ்வளவு தான் இருந்தும் கூட இல்லாதது போல் அல்லவா நடந்து விட்டார்கள்.கல் மனமாவது அந்த ஏழை பெண்ணின் அன்பான குரல் கேட்டால் கரைந்து போய் விடுமே! இடது கைக்கு தெரியாமல் கொடுங்கள் என்று சொல்லியுள்ள எம் அண்ணலாரின் அமுத வாக்காவது இவங்களுக்கு  தெரியவில்லையே...... எப்ப தான்  இவர்கள் மணம் திருந்துமோ...? சின்ன மகன் சில்மியின் சிந்தனையில் பென்னம் பெரிய எண்ணங்கள் உருவாகத் தொடங்கியது. அடுத்த கனம்,வீட்டை விட்டு வெளியேறினான். அவன் செலவுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தையெல்லாம் சேகரித்து வைத்த உண்டியலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த ஏழை பெண்ணைத் தேடி நடந்தான். "தன்னைப் போல் ஓர் பெண் தானே அவள்" நினைத்துப் பார்க்கத் தவரிய தாயை நினைத்து கவலைப் பட்டான் சில்மி.லுகர் தொழுகை நேரமானதால் தொழுது விட்டே அந்தப் பெண்ணை தேடிச் செல்லலாம் என்று நினைத்தவாறு பள்ளிக்குச் சென்றான் அவன். பள்ளியின் பின்னால் இருந்த அகதிகள் வாழும் இருப்பிடத்தின் முன்னே சோகமாக இருந்த அந்த ஏழைப் பெண்ணைக் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவித்தான்."உம்மா ....ஏன்...உம்மா  கவலையா இருக்கீங்க... நீங்க எந்த...ஊர்...?எப்படி இங்கு வந்தீங்க...? நீங்களும் இந்த அகதிகளோடா  இருக்கீங்க...?" பாசத்தோடு பதறிப் பதறி கேள்வி மேல் கேள்விகள் கேட்கும் அந்த பையனைப் பார்க்க அவளுக்கு வியப்பாகவும் கவலைகள் மறந்து மனம் சந்தோசமாகவும் இருந்தது. "அது சரி நீங்கள் யாரு மகன்?" தலைமுடியை  தடவிக்   கொண்டே வினவினாள் அவள்."நான்...நான்....உம்மா...இப்ப உங்களுக்கு ஏசி விரட்டினாங்களே அந்த பெரிய வீட்டு உம்மா... அவங்கட ஒரே ஒரு மகன் நான் தான். எங்கட உம்மா முன் பின் யோசிக்காம உங்கள எசிட்டாங்க. அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் உம்மா. அல்லாஹ்வுக்காக அவங்களை மன்னிச்சிடுங்கம்மா.இந்த பணத்தை வேண்டாமென்று சொல்லாம வங்கிக்கோங்கோ" இப்படியான நல்ல மகனை பெற்றவளா அந்த தாய்...? அப்படி திட்டித் தீர்த்தாளே! " மகன்  அல்லாஹ்  உங்களுக்கு  ரஹ்மத் செய்யட்டும்! மறுமையில் அகிலத்துக்கே அருட்கொடையாக அவனியிலே வந்துதித்த எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற ஏழைகளுடனே தான் இருப்பவர்கள் மகன். அந்த பாக்கியத்தை விடவா மகன் இந்த பேச்சுக்களும்! ஏச்சுக்களும்!  மகன் நான் ஒரு பணக்கார பெண் 1990ம் ஆண்டு கிழக்கு மாகாண கிராமங்கள் தாக்கப்பட்டதில் என் பெற்றோரை துப்பாக்கி பலியாக்கி விட்டது. அவங்கடமௌனத்துக்குப் பிறகு உடமைகளை இழந்து வீடு வாசல்களை விட்டு உடன்பிறப்பு ஒரே ஒரு நானா அவரையும் பிரிந்து அகதியாக புத்தளம் வந்து சேர்ந்தேன் மகன்.என் நானா என் நனாஸ் பாசமுள்ளவர்.அவரைத் தேடித் தேடி தவிக்கின்றேன்.தொடர்ந்து தேடிக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆனால் என் அன்பான நாணவைக் காணலியே...!"குரல் தள தளக்க கண்கள் கண்ணீரை வடிக்க வேதனையோடு மீண்டும் தொடர்ந்தாள்."மகன் உன் முகத்தை பார்க்கும் போது எனக்கு உன் மீது ஒரு தனிப்பட்ட பாசம் வருது.என்னட நானா முகச் சாயல் கூட உன் முகத்திலே தெரியுது மகன்...." அவளின் வேதனை நிறைந்த செய்திகளைக் கேட்டு சில்மியும் கண் கலங்கினான். சரிம்மா ...நீங்க கவலைப்பட வேண்டாம்! நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்க்கிறேன்.உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் நான் என் வாப்பாவிடம் சொல்லி நிறைவேற்றுகின்றேன். இப்போ நீங்க போய் கொஞ்சம் தூங்கி எழும்புங்க எல்லா சோகமும் தானாகவே போய் விடும்." என்று கூறிவிட்டு திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் சில்மி அஸர் தொழுகைக்காக  மீண்டும் பள்ளிக்கு சென்ற போது...ஜனங்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு என்னவென்று பார்ப்பதற்காக போனான். அங்கே அவன் கண்ட காட்சி மனத்தை இடித்து உடைப்பது போலிருந்தது.ஆம்! திடீரென்று மாரடைப்பு வந்ததால் அப் பெண் மரணத்தை தழுவியிருந்தாள்.அப்பெண்ணைக் கண்ட ஜனங்கள் எல்லாம் கவலையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.முகாமில் உள்ளவர்களின் கண்களும் கலங்கிப் போயிருந்தன. பிறகு சிறிது நேரத்தில் அடிக் கழுவி ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக சிலர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.சில்மியின் மனசு எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தது.சில்மி அழுகையுடன் வீடு நோக்கி வருவதைக் கண்ட றிபா "ஏன் மகன் அழுதுகிட்டு வாறீங்க ...முகம் சிவந்து போய் இருக்கே என்ன நடந்திச்சு  சொல்லுங்க மகன்." அவன் நடந்த விடயங்களை அழுது அழுதுசொல்லி முடித்தான்.அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த றிபாவின் கணவர் சியாம் "மகன் அந்தப் போம்புள்ள வேறு என்ன சொன்னா?"என்று கேட்டார். "வாப்பா என்ன பார்க்குறப்போ ...அவங்கட நானாவைப் பார்க்கிறது போல இருக்குதாம்.ஏன் மீது தனிப்பட்ட பாசம் வருகிறதாம் என்று சொன்னப்பா" சியாமுக்கு சம்மட்டியால யாரோ தலையில அடிப்பது போலிருந்தது.தன் மனைவி றிபாவைப் பார்த்த அவர் ,"றிபா யாரைக் காண வேண்டுமென்று துடியாய் துடித்துக் கொண்டு தேடி அலைந்து திரிந்தேனோ ...அதே ஜீவன் தான் என்னுடைய ஒரே ஒரு தங்கை பாத்திமா அவளாகத்தான் இருக்குமோ தெரியாது" சியாம் ஒரு கணம் தன் கடந்த கால வாழ்வில் நடந்து போன கசப்பான நிகழ்வுகளையெல்லாம் ஞாபகப்படுத்திப் பார்த்தான்."நாம் ஊர் தாக்கப்பட்ட  போது மக்களெல்லாம் வெளியேறி பள்ளிவாசல் வளவில் தானே அகதிகளாக குடியேறினார்கள்.அதில் எனது தங்கச்சியும் அடங்குவாலோ? அப்போ சல்மா சாச்சியோட தானே இருந்தா அப்படின்னா?...அந்த பொம்புள்ள என் தங்கச்சியா இருக்குமோ?..."விரைவாகப் போகின்றார் சியாம்.கூடவே றிபாவும்,சில்மியும் சென்றனர். "சியாம் நீங்களா ...வாங்க மகன் பாருங்க உங்கட தங்கச்சி பாத்திமா! மௌத்தாகி  போயிட்டா..."என்று சாச்சி துடித்து அழுவதைக் கண்ட சியாமுக்கு இந்த ஊரிலே தன் தங்கை இருந்த செய்தி தெரியாமல் போனது தலைவிதியகத் தோன்றியது.வேதனைகளை எல்லாம் மறந்து றிபாவின் மைனி பாத்திமா நிம்மதியாக மீளாத்துயிலில்  மூழ்கியிருந்தாள்.அந்த ஏழை மாதுவின் மைனி றிபா தன் பணமே தன்மைனிக்கு உதவவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் திகைத்து நின்றாள்.


தங்கை நுப்ரா...

இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் "தங்கைகளை"புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும்.பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான்.அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  "நானாவை" மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. "அன்புள்ள நானா...! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!" "இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள்.நன்றிகள் நிழல்களாக! " "நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள்.அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன்.எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன். இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா." கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன்.அவன் எழுதும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள்,இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன.இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள் ,ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர்.இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா.அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது.நானா...நானா... என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.  தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான்.தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக "ட்ரெஸ் " பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான்.அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது "வாருங்கள்"என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது.அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்.அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது.இரண்டு,மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான்.நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள்.அதைப் போல் வீடும் கவர்ச்சியாக,அழகாக காட்சியளித்தது.நுப்ரா,வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள்.இடையில்,தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள்.ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.கடிதத்தில் "நானா...நானா..."என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட " நானா" எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது.பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை.அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். "ஏன் பேசாமலே இருக்கீங்க ...என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா...? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. "நீங்க நுப்ராதானே...?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். "ஆமாம்"என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். "நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா...?" என்று படபடப்போடு அவன் கேட்ட போது."ம் ...யாருமே  இல்லை.... உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க.....ஆனா....நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை.....நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே ...இனி  எதற்கு...."  "உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா.....? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். "பெண்களே இப்படித்தானோ"என  எண்ணியவன்  "நீ.....நானா...நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன் ....என்னை மன்னித்துக்கொள்"  "எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை " என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை "நானா " என அழைத்து ,வெறுப்போடு போக இருந்தவனை  திரும்பவும்  உற்காரவைத்தார்கள். கூடவே அவள்  பெற்றோரும்  சிரித்தபடி இன்ஷாத்தை  அன்போடு பார்த்தபடி  நின்றிருந்தார்கள்.இன்ஷாத்துக்கு  எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான். நானா தங்கை என்று பழகுவார்கள்  சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள்.ஆண்கள்  தனியாக  பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம்  தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு  வழங்கப்பட்டது. நுப்ரா "நானா.......நானா....."என  வாய்நிறைய  அழைத்து உபசரித்ததனால்  இன்ஷாத்  மகிழ்ந்து போனான். பின்னர்  அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

வெள்ளை மனசு...

தனியார்,மருத்துவமனை கட்டிலில் அக்பர் நோயாளியாகக் கிடந்தான்.அவன் விழிகள் ஒவ்வொரு வினாடியும் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தன.அவனுக்கு சேலைன் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தமையால்,உடலை அசைக்க முடியவில்லை...ஆனாலும் விழிகளை அசைத்து அசைத்து வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் இதயத்தில் எழுந்த வினாக் குறி வினாடிக்கு வினாடி அதிகரித்தது.பௌமியா என்னைப் பார்க்க வருவாளா? மாட்டாளா? என்பது தான் அது...
தனது உயிர் நண்பன் ஜப்ரானை அழைத்து,பௌமியாவை பார்க்க விரும்புகின்ற விடயத்தை தெரிவித்திருந்தான்.மருத்துவமனையில் தான் இருக்கின்ற செய்தியை அவளிடம் தெரிவிக்கும்படி தெரிவித்திருந்தான் அக்பர்.ஆனால் எவ்வளவு தாமதமாகிறது.ஏன் என்னை அவள் பார்க்க வரவில்லை..?ஒரு வேளை பௌமியா அவனை ஏசியிருப்பாளோ...?  அல்லது அவளது கணவனால் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ....?அக்பரின் சிந்தனைகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தின...
பௌமியாவிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்ற எண்ணம் அவனை என்னவோ செய்தது.தனக்குத் திடீரென ஏற்பட்ட நோயின் கொடூரம் தாங்காத அக்பர் தன்னை மரணம் விரைவில் தழுவிக் கொள்ளும் என எண்ணினான்.அதற்கிடையில் பௌமியாவை பார்த்து விட வேண்டும்.அவளுக்கிழைத்த துரோகங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றே அவனுள்ளம் விடாப்பிடியாய் எண்ணிக் கலங்கியது.நோயின் களைப்பு மிகுதியால் தன்னையறியாமலே தூங்கிப் போனான் அக்பர்.

ஜப்ரானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.எதையோ எதிர்பார்த்து வந்தவனுக்கு எப்படியோ விஷயம் முடிந்து விட்டிருந்தது.திருமணமான ஒரு பெண்ணிடம் உனது பழைய காதலன் பார்க்க விரும்புகிறான் என்று பொய் சொல்லுவது அவளை வேதனைப்படுத்தாதா...?பிரச்சினைகள் கிளம்பாதா...?தன் உயிர் நண்பன் அக்பரின் வேண்டுகோளைத் தட்ட இயலாமல் பௌமியாவின் வீட்டைக் கண்டுபிடித்து வந்தவனுக்கு,அங்கு கிடைத்த வரவேற்பு  அதிர்ச்சியை தந்தது.பௌமியாவிடம் அவன் வந்த விடயத்தைக் கூறிய போது அவள் பதற்றப்பட்டதாகவே தெரியவில்லை.பதிலாக அக்பரின் நிலையை எண்ணி தன் வருத்தத்தை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டாள்.ஜப்ரான் அங்கு சென்று சில நிமிடங்களில் வந்த பௌமியாவின் கணவன் ஜாஸியுடன் சிறிது நேரத்திலே ஜப்ரான் ஐக்கியமாகி விட்டான்.காரணம்,ஜாஸியின் பெருந்தன்மை அப்படி.பார்வையிலே பண்பினை அள்ளி வீசும் முகபாவம் கொண்ட ஜாஸியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்....?அதை விடவும் ஆச்சரியம்.பௌமியாஅக்பரை பார்க்கப் போகலாம் என்று கணவனை அழைத்தது.அப்படியென்றால்,அவருக்கு ஏற்கனவே  தன் காதலைப் பற்றி அவள் சொல்லிருக்க வேண்டும்.பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் ஜாஸி மதிய உணவுக்காக தன்னை இருந்து செல்லுமாறு ஜப்ரானை வினயமாகக் கேட்டுக் கொண்டார்.அடுத்து ஜப்ரானுக்கு கிடைத்த அதிர்ச்சி   மேலும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த இரு குழந்தைகள் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.பௌமியா அண்மையில் தானே திருமணம் செய்து கொண்டாள்.இந்த வளர்ந்த குழந்தைகள் யாருடையது......? "என்ன யோசிக்கிறீங்க மிஸ்டர் ஜப்ரான்" ஜாஸியின் கேள்விக்கு சட்டென்று தன் சந்தேகங்களைக் கூற முடியாமல் அவன் தடுமாறுவதைக் கண்டு,"இவர்கள்  எங்கள் பிள்ளைகள் இல்லை. பௌமியாவோட நானாவின் பிள்ளைகள்.சின்ன வயசில இருந்தே அவங்க பௌமியாக்கிட்டதான் வளர்ந்தாங்க...... இடையில வந்த நான் உண்மையான பாசத்தை எப்படி பிரிக்க முடியும்....? அவரே தொடர்ந்தார். "இவங்கட பேரண்ட்ஸ் பொரின்லே இருக்கிறாங்க. இவர்கள் நான் வெறுத்தா பௌமியா என்னை வெறுத்துடுவா? ...அவ்வளவு அன்பு இந்தப் பிள்ளைகள் மேலே..என் மேலேயும் தான்"என்று கூறி மென்மையாக சிரித்த அவரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜப்ரான்.இப்படியும் ஒரு இதயமா...? பௌமியாவின் மீதும், அவள் கணவனின் மீதும்  அவனுக்கு மதிப்பு வளர்ந்தது. பகலுணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளை பௌமியாவின் உம்மாவின் வீட்டில் விட்டு விட்டு மூவரும் நர்ஸிங் ஹோம் போகத்தயாராகினர்.

அக்பர் வாசலை பார்த்துக் கொண்டு பௌமியாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.பௌமியா தன்னைப்பார்க்க வருவாள் என்றே அவன் இறுதி வரையும் நம்பிக் கொண்டிருந்தான். அவள் வரவில் எல்லை இல்லாத ஆனந்தம் அடைந்தான்.பௌமியா அவளுக்கே உரிய பாணியில் அன்போடு பேசினாள்.அவளின் கணவன் கூட அக்பரோடு அன்பாகவே பேசினார்.இருவரின் அன்பிலும் அக்பர் திளைத்துப் போனான்.அக்பரின் நிலை பற்றி ஜாஸி டொக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போதைய நிலையில் அவனை கவனித்துக் கொள்ள ஒருவர் அருகே இருக்க வேண்டும்.என்பதை அவர் உணர்ந்தார். பெற்றோரைப் பிரிந்து உயர் கல்விக்காக கிழக்கில் இருந்து கொழும்புக்கு வந்த அக்பர்,இங்கு ரூம் ஒன்றில் தான் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.இப்போது திடீரென்று ஏற்பட்ட நோய் பற்றி வீட்டுக்கு தெரியப்படுத்தினால் பெற்றோர்கள் பதறிப் போவார்கள் என்பதால் அக்பர், அவன் நிலையை வீட்டுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை.அந்த விடயத்தில் ஜாசியும் அவன் கருத்துக்கு உடன்பட்டார்.அப்படியானால் அக்பரை யார் பார்த்துக் கொள்வது......? ஜாஸியும் ஜப்ரானும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.அக்பர் சுகமாகும் வரைக்கும்  இருவரும் மாறி மாறி ஹொஸ்பிடலில்  தங்கி அவனை பார்த்துக் கொள்வது என்பதுதான் அது. சில நாட்களில் இரவில் ஜப்ரானும்,பகலில் ஜாஸியும், இன்னும் சில நாட்களில் இரவில் ஜாஸியும், பகலில் ஜப்ரானுமாக மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
இவர்களின் கவனிப்பாலும்,அன்பினாலும் அக்பர் விரைவிலே தேறினான்.அதன் பிறகு அவனை தங்கள்  வீட்டிற்கேதான் பௌமியாவும் அவள் கணவரும் அழைத்துச்  சென்றனர்.உடல் நிலை நன்கு தேறும் வரை இங்கே சில நாட்கள் இருக்கும் படி இருவரும் அன்பான உத்தரவு போட்டனர்.அக்பர் பௌமியாவோடு தன்னை ஒப்பிட்டு வெட்கப்பட்டுக் கொண்டான்.தான் செய்த துரோகம் எவ்வளவு பெரியது.இருந்தும் அவள் அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன்னை அன்போடு கவனித்துக் கொள்கிறாளே என்று பெருமிதம் கொண்டான். பௌமியாவைப் பொறுத்தவரை இருவரும் காதலித்தது உண்மை.திருமணம் செய்து கொள்ள குடும்ப சூழல் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக அவனை வெறுப்பதில் என்ன நியாயம் என்றே நினைத்தாள். ஆனால்,கோழைத்தனமாக வீட்டாரின்  எதிர்ப்பை சமாளிக்க தைரியமின்றி பௌமியாவை ஏமாற்றியதை துரோகம் என்றே அக்பர் கருதினான்.

புதன், 9 மார்ச், 2011

வெள்ளி பூத்து விடியும் வானம்!

விஸ்மிக்கு தன் மகன் கியாஸின் போக்கு அறவே பிடிக்கவில்லை! எதிர்த்துப் பேசிச் சண்டை போடுமளவுக்கு வளர்ந்து (வந்து)விட்டான்.
எவ்வளவோ புத்திமதிகள் சொன்னாள் விஸ்மி.கியாஸ் செவிமடுக்கவேயில்ல!தந்தை இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது இவ்வளவு தப்பாய்ப்  போயிட்டு... என்று தனக்குள் அழுது கொண்டாள் விஸ்மி.ஆம் விஸ்மி ஓர் அநாதை. தன் கணவன் வெளிநாடு போனவர் அங்கேயே  'நானி' எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு,அந்த ஆசை நாயகியுடன் வாழ்வதால் தனது மனைவி, பிள்ளையை மறந்து விட்டார்.எந்தவித தொடர்புகளுமே இல்லாத கியாஸுக்கு அப்போது ஒரு வயது முடிந்து விட்டது.விஸ்மிக்கு கணவன் துரோகம் செய்த விடயம் தன் ஊர் நண்பர்கள் மூலமாக தெரிந்த போது அவளுக்கு தன் எதிர்கால வாழ்வு வெறும் சூன்யமாகவே பட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் தடு மாறினாள்.தன் சொந்த ஊரில் பேசி வந்த திருமணங்களையெல்லாம் உதறித் தள்ளிய விஸ்மி மிக....மிக....எதிர்பார்ப்புக்களுடன், ஆசைகளுடன்,அன்புடனும் உயிருக்கு உயிராக முஹம்மதை திருமணம் செய்து கொண்ட நா(ள்)ல் இருந்து உற்றார்,உறவினர் என்று யாருமே அற்றவளாகி விட்டாள்.தன் சின்ன மகனுக்காக அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலே வேலைகள் செய்து வாழ்வை ஓட்டினாள்! கியா(ஸ்)சையும் வளர்த்தாள்! நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தாள்! படிக்க விட்டாள்! எல்லாவற்றையும் விட அன்பை அடைமழையாய் பொழிந்தாள்! செல்லமாய் வளர்த்தாள்! கியாஸ் கேட்ட எதையுமே அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாங்கிக்கொடுத்தாள். பெரியவனாய் வளர்ந்த பின்னும் கியாஸை ஒரு குழந்தையாகவே எண்ணிச் செல்லம் பொழிந்தாள்! தந்தை இல்லாத குறையே  தெரியாத கியாஸ் தன்னிஷ்டம் போல எதையுமே செய்தான். வளர்ந்து வாலிப வயது வந்த பின் தான் பிடித்த முயலுக்கே மூன்று  கால் என்ற அளவுக்கு வந்து விட்டான். தான் எது செய்தாலும் அது நல்லது என்றே தாயுடன் வாதாடினான்.கெட்ட சிநேகிதர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்க்கொண்டிருந்தான்.
துப்பாக்கி வேட்டுக்களும்,ஆட்கடத்தல்களும்,கொள்ளைகளும்,வாகன விபத்துகளும்,இயற்கை அழிவுகளும்,விலையேற்றங்களின் தாக்கங்களும் நிறைந்துள்ள கிராமத்துக்குள் வாழும் தன்மகனை நல்ல மனமுள்ள,உதவும்கரமுள்ள பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதே விஸ்மியின் ஆசையும்,எதிர்பார்ப்புக்களுமாகும்.
ஆனாலும் அவளது ஆசைகளும்,எதிர்பார்ப்புக்களும் மண்ணோடு மண்ணாகிப் போயின! விஸ்மியால் இனிமேல் பொறுக்க முடியவில்லை.நன்றாக ஏசிவிட்டாள்!
இதனை எதிர்பாராத கியாஸ்.....ச்சீ....நீயும் ஒரு தாயா.......? என்று கேட்டுவிட்டு....வாய்க்கு வந்தவாறு அவளை ஏசிய வண்ணம் வெளியிறங்கிப் போனான்.
விஸ்மிக்கு அழுகை வந்தது....எவ்வளவு அன்பாக வளர்த்தாள்....எவ்வளவு கஷ்டப்பட்டாள்...? நீயும் ஒரு தாயா..?என்று மகன் கேட்டதை நினைத்து நினைத்து கவலைப்பட்டாள்.......
வெளியே சென்ற கியாஸின் காதில் கேட்டது அந்த சொற்பொழிவு..
தனது அன்னை வருந்திச் சுமந்து (ஒருவனை) வருந்திப் பெறுகின்றாள் அவனை அவள் சுமத்தலும் பால் மறப்பித்தலும் முப்பது மாதங்களாகும்.
நபி(ஸல்)அவர்கள் ,"சொன்னார்கள் பெற்றோரே ஒரு பிள்ளையின் சுவர்க்கமும், நரகமும்  என்றும்.   
அதாவது  அவர்களுக்கு  (தாய்,தந்தைகளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டு நடந்தால் சுவர்க்கம் நன்றி கெட்டு மாறுசெய்தால் நரகம்.எனச்சொன்னார்கள். ஒருவன் தன் பெற்றோரின் மண்ணறையை ஜியாரத்துச் செய்வானாயின்  அவன் எடுத்து வைக்கும்   ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் நூறு  நன்மைகளை அவனுக்கு எழுதுகின்றான் . பெற்றோரிடம் நன்றியுடன்  நடந்து அவர்களை அன்புடன் நோக்குவானாயின்  அவனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுடைய  நன்மையை அல்லாஹ்  வழங்குகிறான்.இமாம் ஹஸனுள் பஸரீ(ரஹ்)அவர்கள் ஒரு முறை கஃபாவைத் தவாப் செய்து கொண்டிருந்தார்கள்.அது சமயம் ஒரு மனிதன் ஒரு பெரிய பெட்டியைத் தன் தோளின் மீது சுமந்தவனாகத் தவாப் செய்து கொண்டிருந்தான்.அம்மனிதனை விளித்து,'நீ ஒழுக்கக் குறையாக இவ்வளவு பெரிய பெட்டியைச் சுமந்து கொன்டு தவாப் செய்கின்றாயே ஏன்? எனக் கேட்டார்கள்.அப்பொழுது ஒழுக்கக் குறைவுடன் எதையும் செய்யவில்லை பெரியார் அவர்களே!நான் இப் பெட்டியில் தனது வயது முதிர்ச்சியால் தளர்ந்து போன என் அன்னை இருக்கின்றார்கள்.அவர்களால் தவாப் செய்ய இயலாது;அவர்களுக்குப் பகரமாக அக்கடமையை ஆற்றுவதன் மூலம் நான் என் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணிவிடையையும்,அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையையும் நான் நிறைவேற்றுவதன்  மூலம்,அவர்களுக்கு நன்றி செலுத்தியவனாகவும் ஆகுவேன் அல்லவா? எனக் கூறினான்..அவன்  கூறியதைக் கேட்ட இமாம் அவர்கள் "நீ கிழக்கிலிருந்து  மேற்குவரை எழுபது  முறை உன்  அன்னையச் சுமந்து  திரிந்துப்பணிவிடை செய்த  போதிலும் ,நீ உன் அன்னையின் வயிற்றில் புரண்டிட்டபோது   அவளுக்கு வேதனை ஏற்பட்டிருக்குமே,அதற்கு நிகராக நீ செய்திடும் இப் பணிவிடைகள் ஈடாகாது"என்றார்கள்.
"மன்ரலியே அன்ஹு வாலிதா ஹுஃப அன அன்ஹு ராலின்."என்று அல்லாஹ் ஹதீஸ்குத்ஸியில் கூறுகின்றான்.
எவனாவது பெற்றோர்கள் ஒருவனை பொருந்திக்கொள்கிறானோ,நேசிக்கின்றானோ,அவனை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று'
இதனால் தான்"தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கின்றது.முதுமைப் பருவத்தை எத்தி விட்டு பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொள்ளாமல்,அவர்கள் மனம் புண்படும் படி நடந்து கொண்டதன் காரணமாகப் பெற்றோரின் "பத்துஆ"விற்கு ஆளான பிள்ளைகள்,இறைவனின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகி விடுவார்களாயின் அவர்கள் சுவர்க்கத்தை அடைவது எளிதான செயலல்ல என்பதாகும்.
பெற்றோரின் சொல்லைத் தட்டி நடப்பவன் அல்லாஹ்வை விட்டும்,வானவர்கள் சுவர்க்கம் நல்லோர்கள் அனைவரையும் விட்டும் தொலைவானவன்.
எவன் தாய் தந்தையரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ,அவனின் கையைக் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாக்கப்படும்,"கை வெட்டப்பட்டு விடும்"அவன் சிராத்துல் முஸ்த்தகீம் என்னும் பாலத்தைக் கடக்கு முன்..
"எவன் பெற்றோரை ஏசுவானோ கப்றில் அவனது விலாப்புறத்தில் மழைத் துளிகளைப் போன்று நெருப்புக் கங்குகள் பறக்கும்"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அமைதியான முறையில் மார்க்கப் போதனையை கேட்டு விட்டு கியாஸ்  எழும்பினான்.
மனதில் வேதனைகள் தொடரலானது.ஆம்! தன் தாயை கேவலமாகப் பேசி விட்டேனே என்று!
வீட்டுக்குப் போய் தன் தாயை பார்ப்பதற்காக செல்லும் போது கியாஸின்  கண்களில் பட்டது இந்த காட்சி.
ஆம்! ஒரு ஜனாஸாவை தூக்கிக் கொன்டு கப்ரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
ஜனாஸாவிக்குப்  பின்னால் ஒரு சிறுவன் கதறி கதறி அழுது சென்ற காட்சி அனைவரையுமே அழவைத்தது.யார் மெளதானது என்று தெரியாமல் கியாஸ் ஜனாஸாவோடு சென்ற ஒரு மனிதனிடம் கேட்டான்...."இதோ இவனுடைய தாய் தான்"....உம்மா மட்டும் தான் இவனுக்குத் துணையாக இருந்தாங்க! வாப்பா இல்ல....பாவாம்....இப்ப உம்மாவும் மெளதாகிவிட்டா...அவன்,இனி யாருமே இல்லையே என்று கத்துறான்...அது மட்டுமல்ல....அவனுக்கு உம்மா மேல சரியான அன்பு!
உம்மாவும் மகன்மேல கொள்ளை அன்பு....இப்ப பிரிஞ்சிட்டப்போ இவன் துடிக்காம என்ன செய்வான் தம்பி...? இவ்வளவையும் சொன்ன மனிதன்,அழுது கொன்டு சென்ற சிறுவனை கியாஸுக்கு காட்டினான்.தன் தவறை உணர்ந்தான் கியாஸ்.தாயின் சிறப்பினை நினைத்துப்பார்த்தான்.


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை!


கண்ணே! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே!
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதம்!


ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துவங்க வைத்தாள்! உய்வோம்.


பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்.
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்!


பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துவங்க வைத்தாள்
தொட்டுப் பேசி துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை!


உதிரந் தன்னைப் பாலாய் உதிர்ந்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்!

கவிதை மனதில் அலையாய் பொங்கியது!எவ்வளவு பாசம் என் அன்னை! நான் எவ்வளவு துன்பப்படுத்திட்டேன்,என்று நினைத்து கியாஸ்,உடனடியாக வீட்டுக்கு ஓடி உம்மாவைப் கட்டிப்
பிடித்துத் துன்பம் தீரும் வரை அழுதான்.இது வரை செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்...தாயின் உள்ளம் குளிர்ந்தது!மகனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் விஸ்மி.........!
                                                                                                                 (முற்றும்)