ஞாயிறு, 20 மார்ச், 2011

வெள்ளை மனசு...

தனியார்,மருத்துவமனை கட்டிலில் அக்பர் நோயாளியாகக் கிடந்தான்.அவன் விழிகள் ஒவ்வொரு வினாடியும் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தன.அவனுக்கு சேலைன் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தமையால்,உடலை அசைக்க முடியவில்லை...ஆனாலும் விழிகளை அசைத்து அசைத்து வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் இதயத்தில் எழுந்த வினாக் குறி வினாடிக்கு வினாடி அதிகரித்தது.பௌமியா என்னைப் பார்க்க வருவாளா? மாட்டாளா? என்பது தான் அது...
தனது உயிர் நண்பன் ஜப்ரானை அழைத்து,பௌமியாவை பார்க்க விரும்புகின்ற விடயத்தை தெரிவித்திருந்தான்.மருத்துவமனையில் தான் இருக்கின்ற செய்தியை அவளிடம் தெரிவிக்கும்படி தெரிவித்திருந்தான் அக்பர்.ஆனால் எவ்வளவு தாமதமாகிறது.ஏன் என்னை அவள் பார்க்க வரவில்லை..?ஒரு வேளை பௌமியா அவனை ஏசியிருப்பாளோ...?  அல்லது அவளது கணவனால் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ....?அக்பரின் சிந்தனைகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தின...
பௌமியாவிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்ற எண்ணம் அவனை என்னவோ செய்தது.தனக்குத் திடீரென ஏற்பட்ட நோயின் கொடூரம் தாங்காத அக்பர் தன்னை மரணம் விரைவில் தழுவிக் கொள்ளும் என எண்ணினான்.அதற்கிடையில் பௌமியாவை பார்த்து விட வேண்டும்.அவளுக்கிழைத்த துரோகங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றே அவனுள்ளம் விடாப்பிடியாய் எண்ணிக் கலங்கியது.நோயின் களைப்பு மிகுதியால் தன்னையறியாமலே தூங்கிப் போனான் அக்பர்.

ஜப்ரானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.எதையோ எதிர்பார்த்து வந்தவனுக்கு எப்படியோ விஷயம் முடிந்து விட்டிருந்தது.திருமணமான ஒரு பெண்ணிடம் உனது பழைய காதலன் பார்க்க விரும்புகிறான் என்று பொய் சொல்லுவது அவளை வேதனைப்படுத்தாதா...?பிரச்சினைகள் கிளம்பாதா...?தன் உயிர் நண்பன் அக்பரின் வேண்டுகோளைத் தட்ட இயலாமல் பௌமியாவின் வீட்டைக் கண்டுபிடித்து வந்தவனுக்கு,அங்கு கிடைத்த வரவேற்பு  அதிர்ச்சியை தந்தது.பௌமியாவிடம் அவன் வந்த விடயத்தைக் கூறிய போது அவள் பதற்றப்பட்டதாகவே தெரியவில்லை.பதிலாக அக்பரின் நிலையை எண்ணி தன் வருத்தத்தை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டாள்.ஜப்ரான் அங்கு சென்று சில நிமிடங்களில் வந்த பௌமியாவின் கணவன் ஜாஸியுடன் சிறிது நேரத்திலே ஜப்ரான் ஐக்கியமாகி விட்டான்.காரணம்,ஜாஸியின் பெருந்தன்மை அப்படி.பார்வையிலே பண்பினை அள்ளி வீசும் முகபாவம் கொண்ட ஜாஸியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்....?அதை விடவும் ஆச்சரியம்.பௌமியாஅக்பரை பார்க்கப் போகலாம் என்று கணவனை அழைத்தது.அப்படியென்றால்,அவருக்கு ஏற்கனவே  தன் காதலைப் பற்றி அவள் சொல்லிருக்க வேண்டும்.பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் ஜாஸி மதிய உணவுக்காக தன்னை இருந்து செல்லுமாறு ஜப்ரானை வினயமாகக் கேட்டுக் கொண்டார்.அடுத்து ஜப்ரானுக்கு கிடைத்த அதிர்ச்சி   மேலும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த இரு குழந்தைகள் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.பௌமியா அண்மையில் தானே திருமணம் செய்து கொண்டாள்.இந்த வளர்ந்த குழந்தைகள் யாருடையது......? "என்ன யோசிக்கிறீங்க மிஸ்டர் ஜப்ரான்" ஜாஸியின் கேள்விக்கு சட்டென்று தன் சந்தேகங்களைக் கூற முடியாமல் அவன் தடுமாறுவதைக் கண்டு,"இவர்கள்  எங்கள் பிள்ளைகள் இல்லை. பௌமியாவோட நானாவின் பிள்ளைகள்.சின்ன வயசில இருந்தே அவங்க பௌமியாக்கிட்டதான் வளர்ந்தாங்க...... இடையில வந்த நான் உண்மையான பாசத்தை எப்படி பிரிக்க முடியும்....? அவரே தொடர்ந்தார். "இவங்கட பேரண்ட்ஸ் பொரின்லே இருக்கிறாங்க. இவர்கள் நான் வெறுத்தா பௌமியா என்னை வெறுத்துடுவா? ...அவ்வளவு அன்பு இந்தப் பிள்ளைகள் மேலே..என் மேலேயும் தான்"என்று கூறி மென்மையாக சிரித்த அவரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜப்ரான்.இப்படியும் ஒரு இதயமா...? பௌமியாவின் மீதும், அவள் கணவனின் மீதும்  அவனுக்கு மதிப்பு வளர்ந்தது. பகலுணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளை பௌமியாவின் உம்மாவின் வீட்டில் விட்டு விட்டு மூவரும் நர்ஸிங் ஹோம் போகத்தயாராகினர்.

அக்பர் வாசலை பார்த்துக் கொண்டு பௌமியாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.பௌமியா தன்னைப்பார்க்க வருவாள் என்றே அவன் இறுதி வரையும் நம்பிக் கொண்டிருந்தான். அவள் வரவில் எல்லை இல்லாத ஆனந்தம் அடைந்தான்.பௌமியா அவளுக்கே உரிய பாணியில் அன்போடு பேசினாள்.அவளின் கணவன் கூட அக்பரோடு அன்பாகவே பேசினார்.இருவரின் அன்பிலும் அக்பர் திளைத்துப் போனான்.அக்பரின் நிலை பற்றி ஜாஸி டொக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போதைய நிலையில் அவனை கவனித்துக் கொள்ள ஒருவர் அருகே இருக்க வேண்டும்.என்பதை அவர் உணர்ந்தார். பெற்றோரைப் பிரிந்து உயர் கல்விக்காக கிழக்கில் இருந்து கொழும்புக்கு வந்த அக்பர்,இங்கு ரூம் ஒன்றில் தான் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.இப்போது திடீரென்று ஏற்பட்ட நோய் பற்றி வீட்டுக்கு தெரியப்படுத்தினால் பெற்றோர்கள் பதறிப் போவார்கள் என்பதால் அக்பர், அவன் நிலையை வீட்டுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை.அந்த விடயத்தில் ஜாசியும் அவன் கருத்துக்கு உடன்பட்டார்.அப்படியானால் அக்பரை யார் பார்த்துக் கொள்வது......? ஜாஸியும் ஜப்ரானும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.அக்பர் சுகமாகும் வரைக்கும்  இருவரும் மாறி மாறி ஹொஸ்பிடலில்  தங்கி அவனை பார்த்துக் கொள்வது என்பதுதான் அது. சில நாட்களில் இரவில் ஜப்ரானும்,பகலில் ஜாஸியும், இன்னும் சில நாட்களில் இரவில் ஜாஸியும், பகலில் ஜப்ரானுமாக மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
இவர்களின் கவனிப்பாலும்,அன்பினாலும் அக்பர் விரைவிலே தேறினான்.அதன் பிறகு அவனை தங்கள்  வீட்டிற்கேதான் பௌமியாவும் அவள் கணவரும் அழைத்துச்  சென்றனர்.உடல் நிலை நன்கு தேறும் வரை இங்கே சில நாட்கள் இருக்கும் படி இருவரும் அன்பான உத்தரவு போட்டனர்.அக்பர் பௌமியாவோடு தன்னை ஒப்பிட்டு வெட்கப்பட்டுக் கொண்டான்.தான் செய்த துரோகம் எவ்வளவு பெரியது.இருந்தும் அவள் அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன்னை அன்போடு கவனித்துக் கொள்கிறாளே என்று பெருமிதம் கொண்டான். பௌமியாவைப் பொறுத்தவரை இருவரும் காதலித்தது உண்மை.திருமணம் செய்து கொள்ள குடும்ப சூழல் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக அவனை வெறுப்பதில் என்ன நியாயம் என்றே நினைத்தாள். ஆனால்,கோழைத்தனமாக வீட்டாரின்  எதிர்ப்பை சமாளிக்க தைரியமின்றி பௌமியாவை ஏமாற்றியதை துரோகம் என்றே அக்பர் கருதினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக