ஞாயிறு, 20 மார்ச், 2011

தங்கை நுப்ரா...

இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் "தங்கைகளை"புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும்.பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான்.அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  "நானாவை" மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. "அன்புள்ள நானா...! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!" "இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள்.நன்றிகள் நிழல்களாக! " "நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள்.அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன்.எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன். இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா." கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன்.அவன் எழுதும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள்,இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன.இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள் ,ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர்.இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா.அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது.நானா...நானா... என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.  தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான்.தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக "ட்ரெஸ் " பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான்.அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது "வாருங்கள்"என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது.அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்.அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது.இரண்டு,மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான்.நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள்.அதைப் போல் வீடும் கவர்ச்சியாக,அழகாக காட்சியளித்தது.நுப்ரா,வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள்.இடையில்,தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள்.ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.கடிதத்தில் "நானா...நானா..."என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட " நானா" எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது.பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை.அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். "ஏன் பேசாமலே இருக்கீங்க ...என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா...? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. "நீங்க நுப்ராதானே...?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். "ஆமாம்"என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். "நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா...?" என்று படபடப்போடு அவன் கேட்ட போது."ம் ...யாருமே  இல்லை.... உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க.....ஆனா....நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை.....நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே ...இனி  எதற்கு...."  "உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா.....? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். "பெண்களே இப்படித்தானோ"என  எண்ணியவன்  "நீ.....நானா...நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன் ....என்னை மன்னித்துக்கொள்"  "எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை " என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை "நானா " என அழைத்து ,வெறுப்போடு போக இருந்தவனை  திரும்பவும்  உற்காரவைத்தார்கள். கூடவே அவள்  பெற்றோரும்  சிரித்தபடி இன்ஷாத்தை  அன்போடு பார்த்தபடி  நின்றிருந்தார்கள்.இன்ஷாத்துக்கு  எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான். நானா தங்கை என்று பழகுவார்கள்  சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள்.ஆண்கள்  தனியாக  பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம்  தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு  வழங்கப்பட்டது. நுப்ரா "நானா.......நானா....."என  வாய்நிறைய  அழைத்து உபசரித்ததனால்  இன்ஷாத்  மகிழ்ந்து போனான். பின்னர்  அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக