சனி, 6 ஆகஸ்ட், 2011

வெள்ளி பூத்து விடியும் வானம்......!

விஸ்மிக்கு தன் மகன் கியாஸின் போக்கு அறவே பிடிக்கவில்லை! எதிர்த்துப் பேசிச் சண்டை போடுமளவுக்கு வளர்ந்து (வந்து)விட்டான்.
எவ்வளவோ புத்திமதிகள் சொன்னாள் விஸ்மி.கியாஸ் செவிமடுக்கவேயில்ல!தந்தை இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது இவ்வளவு தப்பாய்ப்  போயிட்டு... என்று தனக்குள் அழுது கொண்டாள் விஸ்மி.ஆம் விஸ்மி ஓர் அநாதை. தன் கணவன் வெளிநாடு போனவர் அங்கேயே  'நானி' எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு,அந்த ஆசை நாயகியுடன் வாழ்வதால் தனது மனைவி, பிள்ளையை மறந்து விட்டார்.எந்தவித தொடர்புகளுமே இல்லாத கியாஸுக்கு அப்போது ஒரு வயது முடிந்து விட்டது.விஸ்மிக்கு கணவன் துரோகம் செய்த விடயம் தன் ஊர் நண்பர்கள் மூலமாக தெரிந்த போது அவளுக்கு தன் எதிர்கால வாழ்வு வெறும் சூன்யமாகவே பட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் தடு மாறினாள்.தன் சொந்த ஊரில் பேசி வந்த திருமணங்களையெல்லாம் உதறித் தள்ளிய விஸ்மி மிக....மிக....எதிர்பார்ப்புக்களுடன், ஆசைகளுடன்,அன்புடனும் உயிருக்கு உயிராக முஹம்மதை திருமணம் செய்து கொண்ட நா(ள்)ல் இருந்து உற்றார்,உறவினர் என்று யாருமே அற்றவளாகி விட்டாள்.தன் சின்ன மகனுக்காக அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலே வேலைகள் செய்து வாழ்வை ஓட்டினாள்! கியா(ஸ்)சையும் வளர்த்தாள்! நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தாள்! படிக்க விட்டாள்! எல்லாவற்றையும் விட அன்பை அடைமழையாய் பொழிந்தாள்! செல்லமாய் வளர்த்தாள்! கியாஸ் கேட்ட எதையுமே அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாங்கிக்கொடுத்தாள். பெரியவனாய் வளர்ந்த பின்னும் கியாஸை ஒரு குழந்தையாகவே எண்ணிச் செல்லம் பொழிந்தாள்! தந்தை இல்லாத குறையே  தெரியாத கியாஸ் தன்னிஷ்டம் போல எதையுமே செய்தான். வளர்ந்து வாலிப வயது வந்த பின் தான் பிடித்த முயலுக்கே மூன்று  கால் என்ற அளவுக்கு வந்து விட்டான். தான் எது செய்தாலும் அது நல்லது என்றே தாயுடன் வாதாடினான்.கெட்ட சிநேகிதர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்க்கொண்டிருந்தான்.
துப்பாக்கி வேட்டுக்களும்,ஆட்கடத்தல்களும்,கொள்ளைகளும்,வாகன விபத்துகளும்,இயற்கை அழிவுகளும்,விலையேற்றங்களின் தாக்கங்களும் நிறைந்துள்ள கிராமத்துக்குள் வாழும் தன் மகனை நல்ல மனமுள்ள,உதவும் கரமுள்ள பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதே விஸ்மியின் ஆசையும்,எதிர்பார்ப்புக்களுமாகும்.
ஆனாலும் அவளது ஆசைகளும்,எதிர்பார்ப்புக்களும் மண்ணோடு மண்ணாகிப் போயின! விஸ்மியால் இனிமேல் பொறுக்க முடியவில்லை.நன்றாக ஏசிவிட்டாள்!
இதனை எதிர்பாராத கியாஸ்.....ச்சீ....நீயும் ஒரு தாயா.......? என்று கேட்டுவிட்டு....வாய்க்கு வந்தவாறு அவளை ஏசிய வண்ணம் வெளியிறங்கிப் போனான்.
விஸ்மிக்கு அழுகை வந்தது....எவ்வளவு அன்பாக வளர்த்தாள்....எவ்வளவு கஷ்டப்பட்டாள்...? நீயும் ஒரு தாயா..?என்று மகன் கேட்டதை நினைத்து நினைத்து கவலைப்பட்டாள்.......வெளியே சென்ற கியாஸின் காதில் கேட்டது அந்த சொற்பொழிவு..தனது அன்னை வருந்திச் சுமந்து (ஒருவனை) வருந்திப் பெறுகின்றாள் அவனை அவள் சுமத்தலும் பால் மறப்பித்தலும் முப்பது மாதங்களாகும்.
நபி(ஸல்)அவர்கள் ,"சொன்னார்கள் பெற்றோரே ஒரு பிள்ளையின் சுவர்க்கமும், நரகமும்  என்றும்.   
அதாவது  அவர்களுக்கு  (தாய்,தந்தைகளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டு நடந்தால் சுவர்க்கம் நன்றி கெட்டு மாறுசெய்தால் நரகம்.எனச் சொன்னார்கள். ஒருவன் தன் பெற்றோரின் மண்ணறையை ஜியாரத்துச் செய்வானாயின்  அவன் எடுத்து வைக்கும்   ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் நூறு  நன்மைகளை அவனுக்கு எழுதுகின்றான் . பெற்றோரிடம் நன்றியுடன்  நடந்து அவர்களை அன்புடன் நோக்குவானாயின்  அவனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுடைய  நன்மையை அல்லாஹ்  வழங்குகிறான்.இமாம் ஹஸனுள் பஸரீ(ரஹ்)அவர்கள் ஒரு முறை கஃபாவைத் தவாப் செய்து கொண்டிருந்தார்கள்.அது சமயம் ஒரு மனிதன் ஒரு பெரிய பெட்டியைத் தன் தோளின் மீது சுமந்தவனாகத் தவாப் செய்து கொண்டிருந்தான்.அம்மனிதனை விளித்து,'நீ ஒழுக்கக் குறையாக இவ்வளவு பெரிய பெட்டியைச் சுமந்து கொண்டு தவாப் செய்கின்றாயே ஏன்? எனக் கேட்டார்கள்.அப்பொழுது ஒழுக்கக் குறைவுடன் எதையும் செய்யவில்லை பெரியார் அவர்களே!நான் இப் பெட்டியில் தனது வயது முதிர்ச்சியால் தளர்ந்து போன என் அன்னை இருக்கின்றார்கள்.அவர்களால் தவாப் செய்ய இயலாது;அவர்களுக்குப் பகரமாக அக்கடமையை ஆற்றுவதன் மூலம் நான் என் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணி விடையையும்,அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையையும் நான் நிறைவேற்றுவதன்  மூலம்,அவர்களுக்கு நன்றி செலுத்தியவனாகவும் ஆகுவேன் அல்லவா? எனக் கூறினான்..அவன்  கூறியதைக் கேட்ட இமாம் அவர்கள் "நீ கிழக்கிலிருந்து  மேற்குவரை எழுபது  முறை உன்  அன்னையச் சுமந்து  திரிந்துப் பணி விடை செய்த  போதிலும் ,நீ உன் அன்னையின் வயிற்றில் புரண்டிட்ட போது   அவளுக்கு வேதனை ஏற்பட்டிருக்குமே,அதற்கு நிகராக நீ செய்திடும் இப் பணி விடைகள் ஈடாகாது"என்றார்கள்.
"மன்ரலியே அன்ஹு வாலிதா ஹுஃப அன அன்ஹு ராலின்."என்று அல்லாஹ் ஹதீஸ்குத்ஸியில் கூறுகின்றான்.
எவனாவது பெற்றோர்கள் ஒருவனை பொருந்திக்கொள்கிறானோ,நேசிக்கின்றானோ,அவனை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று'
இதனால் தான்"தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கின்றது.முதுமைப் பருவத்தை எத்தி விட்டு பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொள்ளாமல்,அவர்கள் மனம் புண்படும் படி நடந்து கொண்டதன் காரணமாகப் பெற்றோரின் "பதுஆ"விற்கு ஆளான பிள்ளைகள்,இறைவனின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகி விடுவார்களாயின் அவர்கள் சுவர்க்கத்தை அடைவது எளிதான செயலல்ல என்பதாகும்.பெற்றோரின் சொல்லைத் தட்டி நடப்பவன் அல்லாஹ்வை விட்டும்,வானவர்கள் சுவர்க்கம் நல்லோர்கள் அனைவரையும் விட்டும் தொலைவானவன்.
எவன் தாய் தந்தையரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ,அவனின் கையைக் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாக்கப்படும்,"கை வெட்டப்பட்டு விடும்"அவன் சிராத்துல் முஸ்த்தகீம் என்னும் பாலத்தைக் கடக்கு முன்..
"எவன் பெற்றோரை ஏசுவானோ கப்றில் அவனது விலாப்புறத்தில் மழைத் துளிகளைப் போன்று நெருப்புக் கங்குகள் பறக்கும்"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அமைதியான முறையில் மார்க்கப் போதனையை கேட்டு விட்டு கியாஸ்  எழும்பினான்.
மனதில் வேதனைகள் தொடரலானது.ஆம்! தன் தாயை கேவலமாகப் பேசி விட்டேனே என்று!
வீட்டுக்குப் போய் தன் தாயை பார்ப்பதற்காக செல்லும் போது கியாஸின்  கண்களில் பட்டது இந்த காட்சி.
ஆம்! ஒரு ஜனாஸாவை தூக்கிக் கொன்டு கப்ரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.ஜனாஸாவிக்குப்  பின்னால் ஒரு சிறுவன் கதறி கதறி அழுது சென்ற காட்சி அனைவரையுமே அழவைத்தது.யார் மெளதானது என்று தெரியாமல் கியாஸ் ஜனாஸாவோடு சென்ற ஒரு மனிதனிடம் கேட்டான்...."இதோ இவனுடைய தாய் தான்"....உம்மா மட்டும் தான் இவனுக்குத் துணையாக இருந்தாங்க! வாப்பா இல்ல....பாவாம்....இப்ப உம்மாவும் மெளத்தாகி விட்டா...அவன்,இனி யாருமே இல்லையே என்று கத்துறான்...அது மட்டுமல்ல....அவனுக்கு உம்மா மேல சரியான அன்பு! உம்மாவும் மகன்மேல கொள்ளை அன்பு....இப்ப பிரிஞ்சிட்டப்போ இவன் துடிக்காம என்ன செய்வான் தம்பி...? இவ்வளவையும் சொன்ன மனிதன்,அழுது கொண்டு சென்ற சிறுவனை கியாஸுக்கு காட்டினான்.தன் தவறை உணர்ந்தான் கியாஸ்.தாயின் சிறப்பினை நினைத்துப்பார்த்தான்.

பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை!

கண்ணே! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே!
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதம்!

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துவங்க வைத்தாள்! உய்வோம்.

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்.
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்!

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துவங்க வைத்தாள்
தொட்டுப் பேசி துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை!

உதிரந் தன்னைப் பாலாய் உதிர்ந்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்!

கவிதை மனதில் அலையாய் பொங்கியது!எவ்வளவு பாசம் என் அன்னை! நான் எவ்வளவு துன்பப்படுத்திட்டேன்,என்று நினைத்து கியாஸ்,உடனடியாக வீட்டுக்கு ஓடி உம்மாவைப் கட்டிப் பிடித்துத் துன்பம் தீரும் வரை அழுதான்.இது வரை செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்...தாயின் உள்ளம் குளிர்ந்தது!மகனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் விஸ்மி.........!
                                                                                                                

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒரு நண்பியின் கதை...!!!

நேரம் பகல் ஒரு மணி இருக்கும்.லஞ்ச் எடுத்துக் கொண்ட லட்சுமி கைகளைத் துடைத்துக் கொண்டே ரெஸ்ட் எடுப்பதற்காகத் தான் அறையினுள் சென்று கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள்
.அவளது ரெஸ்டைக்  கலைத்து விடும் வகையில் வாசற் கேற்றடியில் தபாற்காரன் சங்கரதாசின் சைக்கிள் மணி ஓசை கேட்டு விரைந்து சென்ற லட்சுமியின் கரத்தில் சிரித்துக் கொண்டே சங்கரதாஸ் போஸ்மன் இன்று ஒரே ஒரு கடிதம் தான் வந்துள்ளது என்று சொன்ன படியே கடிதத்தைக் கொடுத்து விட்டு மறைந்தான்.
லட்சுமி கடிதத்தை வங்கிக் கொண்டு தன் மேசையருகில் வந்து வழமை போலவே அக் கடிதத்தை அவசர அவசரமாகப் பிரிந்தாள்
 அறிமுகமில்லாத ஓர் புதிய கடிதத்தில்  முத்து முத்தான அழகிய எழுத்துக்கள்.ஆசையோடு படிக்கத் துவங்கினால்;அதில்.....
 கவிதாவுள்ளம் கொண்ட ஆசிரியைக்
 கலைவந்தனங்கள்.நான் கடந்த வாரம் வெளி வந்த தினகரன் வாரமலரின் மலையக மஞ்சரிப் பகுதியிலிருந்து உங்களது முகவரியை பெற்றுக் கொண்டேன்
 தாங்கள் கலையுள்ளங்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மலையகத்திலிருந்து மாதா மாதம் மலையூற்று எனும் பெயரில் ஓர் கலை இலக்கியச் சஞ்சிகை வெளிவருவதாக அறிந்தேன்
 உடனே அதைப் படிக்க வேண்டும் அதற்கு எழுத வேண்டும் என்று என்னுள்ளம் துடிக்கவே இம்மடலை நான் வரைகின்றேன்.
எனவே உங்களால் வெளியிடப்படும் மலையூற்று இதழின் ஓர் பிரதியை எனக்கு அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.அதற்கான அன்பளிப்பை உடன் அனுப்பி வைப்பேன்.உங்களது முயற்சி வெற்றி பெற எந்தன் உதவிகளும் ஒத்துழைப்புகளும் என்றுமே உண்டு.ஏனையவை பின் தொடரும்.-
நன்றி,
இவ்வண்ணம் இலக்கியதாகமுள்ள கலைவதனன்
கடிதத்தைப் படித்த லட்சுமி;கலைவதனின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் உடனே மலையூற்று இதழை தபால் மூலம் அனுப்பி வைத்தாள்.
இதன் விளைவு அடிக்கடி நானா தங்கையாக மடல்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.நாட்கள் நகர நகர இவர்களின் சகோதர உறவு மாறி பாச எல்லை மீறி மிகவும் இறுக்கமான காதலாக மாறியது.
லட்சுமியின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக கலைவதனன் தன் குடும்ப நிலைமைகளை மனம் திறந்து எழுதுவான்
லட்சுமியும் அவ்வப்போது மன வேதனைகளுக்கு ஆறுதல் படுத்தி,'துன்ப நிலையும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே
 அன்புக் கழிவில்லை'எனும் பாரதியின் சிந்தனை ஊற்றை எடுத்துக் காட்டி பதில் வரைவாள்.
ஒரு நாள பேராதனையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள தன் அக்கா வீடு சென்ற லட்சுமி பாசிக் குடாவில் வைத்து முன் ஏற்பாட்டின் படி கலைவதனைச் சந்தித்தாள்
கறிவேப்பிலை கொத்து மாதிரி இளைஞன்,அலை அலையான சுருள் முடி,அரும்பு மீசை,ஆணழகன் போட்டியில் முதற்பரிசு கிடைக்கும் அளவுக்கு உடற்கட்டு
வங்கியில் காசாளர் பதவி.இத்தனை லட்சணங்களும் பொருந்திய அவன் வேதனையோடு மனம் திறந்து பேசினான்
அப்போது தான் அவன் சோகமே லட்சுமியை பரிதாபத்துக்குள்ளக்கியது.லட்சுமி நான் பிறந்த இடம் மலையகம் தான்.என் தாய் கொட்டும் மழையிலும்,மலையேறி இறங்கிய பாதங்கள் சோர்வுற்று சங்கொலி கேட்ட செவிகள் அடைத்து படுத்த படுக்கையாய் லயத்தில் தஞ்சமடைந்தார்
இதன் விளைவு என் எதிர் கால வாழ்வுக்காய் பல நூறு கற்பனைகளைச் சுமந்து விழித்திருந்த உத்தமியின் விழிகள் எனது ஐந்தாவது வயதில் நிரந்தரமாகவே மூட்டி விட்டது
இந்த நிலையில் பாசமில்லா தந்தையின் இரண்டாவது மனைவியின் அரவணைப்பில் எவ்வித உடன் பிறப்புக்களும் இன்றி தன்னந்தனிமையில் வாழ்ந்தேன்
பெண்கள் போலவே சகல வேலைகளையும் நானே செய்வேன். சமைத்து உண்டு,படித்து சிரமங்கள் மத்தியில் தொழிலை விடா முயற்சியினால் பெற்று இன்று தொழில் நிமிர்த்தம் இங்கு வசிக்கின்றேன்
தற்போது முப்பது வயதாகியும் கூட ஒரு மணப் பெண்ணைக் கட்டித் தர யாருமேயற்ற அநாதையாக இன்று வாழ்கிறேன
  தன்   உள்ளத்தை லட்சுமியின் சந்திப்பின் போது வெளிப்படுத்திக் காட்டினான்  
என்னிதயத்தில் குடி அமர யாருக்குமே இடமேயில்லை.இடமளிக்கவும் மாட்டேன். கலைவதனன்
நிழலைத் தவிர இன்னும் ஓர் ஆடவனின் நிழலைக் கூட இந்த லட்சுமியில் பட விட மாட்டேன் என்னுயிருள்ள வரை தாய்க்குத் தாயாக உடன் பிறப்புக்கு உடன் பிறப்பாக மனைவிக்கு மனைவியாக இருந்து உங்கள் மனம் வேதனைப்படாமல் கண் கலங்காமல் உங்களுக்குத் துணையாய் நான் இருந்து வாழ்வேன்.என்று உறுதிகளை சத்திய வாக்கின் மூலம் கலைவதனுக்குக் கூறிவிட்டு அவளிடமிருந்து பிரிய மனம் இன்றி விடைபெற்றுக் கொண்டாள் லட்சுமி
.இவர்களின் உறவு இப்படியே துளிர் விட்டு செழித்து வளரத் துவங்கியது.இதை அறிந்த லட்சுமியின் அக்கா தயா இருவரையும் எவ்விதத்திலாவது சரி பிரித்து விட்டு தன் கணவனின் தம்பிக்குத் தங்கையை கட்டிவைக்கத் திட்டம் தீட்டினாள்.
.இல்லாத குறைகளையும் பொல்லாத பொய்களையும் கலைவதனன் மேல் சுமத்தி லட்சுமியை தந்தையிடம் சொல்லிக் கொடுத்தாள்.
இதன் விளைவு லட்சுமி மீது உயிரையே வைத்து இருந்தது
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுமடி' என வாழ்ந்த அப்பா லட்சுமியின் மீது கடலலை போல சீறிப் பாய்ந்து பேசினான்.
லட்சுமி எதுவுமே பேசாமல் பொறுமை ஒன்றே சிறந்த பொக்கிஷமெனக் கருதிக் கொண்டு மௌனத்தைத் தன் ஆடையாய் போர்த்திக் கொண்டாள்.
அடுத்த நாள் லட்சுமியின் அப்பா சண்முகப்பிள்ளை மனைவியை அழைத்து பெருமாள்;பின்னேரம் லட்சுமியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க.எல்லாவற்றையும் கவனித்துக் கொள் என்று  சொன்னார்.
பெருமாளுக்கு கணவன் சண்முகத்தின் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு எதுவுமே பதிலாகப் பேச தைரியம் ஏற்படவில்லை.கணவர் பேசிய பையனுடைய திருக்கல்யாணக் குணங்களைப் பற்றி அறிந்தும் கூடத் தன் மகளை கரம் பிடித்துக் கொடுப்பது  தற்கொலைக்குச் சமன்;என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம் குறிப்பிட்டபடி அவர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.
பெண்ணை எங்களுக்கு நன்றாகவே பிடிச்சுப் போச்சு இனி திரு மண ஏற்பாடுகளைத் துரித மாக்கி கொட்டும் மேளம் தாலி கட்ட வேண்டியது தான் என்று சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.
மாப்பிள்ளையின் அம்மா நாங்க பெத்தவங்களோட கஷ்ட நஷ்டங்களை,துன்ப துயரங்களை நன்கு புரிந்தவங்க தான்.ஆனாலும் மற்றவங்க சீதனமா தந்தார்கள் என்று கேட்டா மதிப்பாக நாங்க சொல்ல வேண்டும் என்ன?
அப்போ எங்களை விட பெருமை உங்கள் மகளுக்குத்தானே உண்டு
பெரிய மரியாதையாக,கௌரவமாக உங்கள் பெண்ணை மதிப்பினம் என்றவாறே தன் காளையை கன்னி மரத்தில் கட்டி வைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவை ஏல விற்பனைக்காக மதிப்பீடு செய்தான்.
எல்லாவற்றையும் அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சரி;என்று சொன்னவாறே காலம் முழுவதும் வாழப் போறது நம்ம மகள் தானே,முதலில் லட்சுமியின் விருப்பத்தை கேட்போம் என்றவாறு லட்சுமி;உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கம்மா?என்று கேட்டார் சண்முகப்பிள்ளை.
ஆமாம் அப்பா நல்லாப் பிடிச்சிருக்கு என்றாள் லட்சுமி.சக்கரைப் பந்தலில் தேன் மாறி பொழிந்ததைப் போன்ற  இன்பமான மகிழ்ச்சியோடு சரி நாங்க போகிறோம்,இனி ஏனைய திருமண விடயங்களைக் கவனிப்போம் என சொல்லிக் கொண்டு இருப்பிடத்தை விட்டு எழுந்தார்கள்
லஷ்மி,அவர்களைப் பார்த்து ஒரு சிறிய விஷயம் தவறாக என்னை இடைபோட வேண்டாம் உங்களுடன் பேச எனக்கு சிறு ஆசை என்றாள்.....
மாப்பிள்ளை வீட்டார் ஆசையோடு என்ன என்று கேட்பதை போல் பாசமோடு பார்வையை லஷ்மியின் மீது படர விட்டார்கள்.
உங்களுடைய மகனின் குணத்திற்கும்,பண்பிற்கும் என்னைப் பெற்றவர்கள் தருகின்ற அன்பளிப்புக்குப் பேர் தான் வரதட்சனை என்றால்,ஒழுக்கம் கேட்டுப் போய் சூதாடி மற்றப் பெண்களோடு தொடர்பு வைத்து சீரழிஞ்சு போய் நட மாடும் ஒருவனைக் கட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டிய எனக்காக அவரைப் பெற்றவங்க என்ற ரீதியில் எனக்கு நீங்கள் தர வேண்டிய இன்னலுக்கு என்ன சொல்வது?
இவைகளை நீங்க மறைத்து மூடி நல்ல பசுமையானவர்கள் போல் தானே சம்பந்தம் பேசி தூய்மையான பெண்ணின் வாழ்விற்கு கலங்கத்தை ஏற்படுத்த வந்தீர்கள்?
என்ன தலையை குணிந்து எல்லாமே உண்மையென்று ஏற்றுக்கொள்வதற்காக இந்த மௌனராகத்தை இசைக்கின்றீர்களா?
சரி சரி அவரை நான் மணந்து திருத்தப் போகிறேன்.நல்லவராக மாற்றியமைக்கப் போகிறேன்.
ஆனால்,என் திருமண வாழ்விற்காக நீங்க இந்த மலைநாட்டுப் பெண்ணிடம் வாங்கப் போகின்ற வரதட்சனை பற்றி எதுவுமே வேண்டாம். நாம் எதிபார்க்கவில்லையென்று சொன்னால் சரி.வந்தவர்கள் உடனே எதுவுமே பதிலாகப் பேசாது திரும்பி விட்டார்கள்
லட்சுமி மனம் விரும்பியவனை மணமகனாய் பெரும் எதிர் பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது எண்ணங்களைச் சுமந்து பறந்து வந்த மடலொன்று லட்சுமியின் கரங்களை முத்தமிட்டது
மடலை ஆவலோடு உடைத்தாள்.என் அன்பு லட்சமி;நான் உங்களை அன்போடு நேசித்தேன்.மனமாற விரும்பினேன்.அதே போல் நீங்களும் என்னை நேசித்தீர்கள்.விரும்பினீர்கள்.ஆனால் இன்று எமது உறவுக்கு உங்கள் தந்தையார் எவ்வித ஆதரவும் தராமல் எதிர்ப்பாக இருப்பதாகவும் என் நண்பனை உங்களுக்குத் திருமணம் பேசித் தீர்மானம் எடுத்து விட்டதாகவும் இன்று அறிந்தேன்.
வேதனை மேல் வேதனையாக சோதனைகளை சுமக்க முடியாத மனநிலையில் நான் இன்று இரவு தமிழ் நாடு செல்கிறேன்.
.நான் உங்களை உடலால் பிரிந்து அங்கு செல்கின்றேனே தவிர என் உள்ளம் உங்களைப் பிரிந்து அங்கு செல்லவில்லை.உங்கள் நினைவு நித்தமும் என்னிதயத்தரையில் நிழலாடிக் கொண்டேயிருக்கும
உங்கள் மனநிலை எனக்குத் தெரியும்.ப்ளிஸ் என்னை என் பிரிவை நினைத்து கவலைப் பட வேண்டாம்.என்றோ  ஒரு நாள் உயிர் இருந்தாள் என் பிறந்த மண்ணான மலயகத்திற்கே மீள வருவேன்.
அப்போ உங்களை நேரில் சந்திக்கின்றேன்.உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன்.இந்த அஞ்சல் உங்கள் வசம் கிடைக்கும் போது தமிழ் நாட்டில் இருப்பேன்.உங்கள் நினைவுகளைச் சுமந்து தமிழ் நாட்டில் கண்ணீரோடு சங்கமிக்கிறேன்.நீங்கள் நல்லபடி வாழ மன நிறைவோடு வாழ்த்துகின்றேன்.
                                                                                                                                               நன்றி.இவன் உங்கள்                                                                                                                    நினைவில் வாடும்
                                                                            கலைவதணன்  .                     
 மடலை படித்த லட்சுமியின் மனம் அனலிடப்பட்ட மெழுகு போல் உருவாகியது தன் உறவுக்குத் தடையாய் நின்றவர்களை நினைத்து நினைத்து வருந்தினாள்.அவளது சோகம் அவளை விட்டுத்தான் போகுமா..........? மலைப்பாறைகளில் இருந்து கீழ் நோக்கி வடிந்து ஓடி வரும் தண்ணீரோடு அவள் இதயத்திலிருந்து பொங்கி வரும் கண்ணீர் சோக பள்ளத்தினுள் சங்கமானது.
       

                                                  

எதிர்பாரத நிகழ்வுகள்..........!

ஹோட்டலில் இருந்து சாப்பாட்டுப் பார்சலுடன் வீடு வந்து சேர்ந்த நான் நேரத்தைப் பார்க்கிறேன்.ஓ......மணி 2 -30 ஆகப் போகிறதே.தங்கை சுல்பாவை இன்னும் காணோமே?வழமையாக இரண்டு மணிக்குமுன் வீட்டில் இருப்பாளே.அவசர அவசரமாகவே வாசலில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் வீதியைப் பார்க்கிறேன்.மனம் பதறுகிறது.சுல்பாவைக் காணவில்லை.இன்னுமொரு அரைமணி நேரம் பார்த்து விட்டு அவளைத் தேடிச் செல்வோம் என எண்ணியவாறு முன் ஹோலிலுள்ள ஈஸிச் செயாரில் சாய்கிறேன்.எனக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கும் தங்கை சுல்பாவைத் தவிர யார் தான் இருக்கிறார்கள்.சுல்பாவைப் பார்க்க முன்னே என் வாப்பா இறைவனடி போய் விட்டார்.அந்தத் துயரில் சுல்பாவை என் கையில் ஒப்படைத்து விட்டு தாயும் காலமாகிவிட்டாள்.அநாதைகளாகி சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்த்தோம்.எமது துரதிர்ஷ்டமோ என்னவோ நான் பத்து வயதை அடைந்த பின் சின்னம்மா விபத்தொன்றில் காலமாக,ஐந்து வயதுத் தங்கை சுல்பாவோடு தனித்து விடப்பட்டேன்.அந்த பத்து  வயதில் இருந்தே நான் அங்கே இங்கே என்று சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்து என் அன்புத் தங்கை சுல்பாவை வளர்த்துப் படிக்க வைத்துப் பூரிப்படைந்தேன்.நான் தான் எத்தனை கஷ்டங்களைச் சகித்திருப்பேன்.வறுமையின் சின்னமாய் சுல்பா வனப்பு மிகு செல்வியானாள்.அவளைப் படிக்க வைத்து ஓர் பட்டதாரியாக்கி..........நான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாமாகச் சேர்த்து இறுதியாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்ற ஆதங்கத்தில் உறுதியோடு உழைத்தேன்.ஆம்......என் கனவுகள் நனவாகின.என் தங்கை படித்து பட்டதாரி ஆசிரியையாகியும் விட்டாள்.இனி என் கனவுகள் எல்லாம் அவளை நல்ல கணவனுக்குக் கைப்பாற்றி  கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனாலும்........கையிலே அதற்குரிய பணமின்றி என் எண்ணத்தில் கீறல் விழுந்தது.பிறரிடம் கை நீட்டாமல் சுயமாக உழைத்து அவளைப் படிக்க வைத்தேன். இன்று சீதனத்துக்காக எப்படி ஆயிரக்கணக்கில் சேர்ப்பேன்.....என்ன நானா.....நான் வந்தது கூடத் தெரியாம ...இவ்வளவு பலமா யோசிக்கின்றீர்களே.......என்கிட்ட சொல்லக் கூடாதா? நீங்க கவலைப் பட்டா......நான் எப்பிடி நானா சிரிப்பேன்? என்ற சுல்பாவின் குரல் கேட்ட நான் அடடே,வந்திட்டியாம்மா....லேட் ஆயிடுச்சே என்று யோசிச்சிட்டிருந்தேன்.ஏம்மா லேட்? சாப்பிடு போய்.இப்ப தான் எனக்கு நிம்மதி.நீ கொஞ்சம் லேட்டா வந்தா இந்த நானா படுற துன்பம் கொஞ்சமா? சிரித்துக் கொண்டே சொன்னேன்.இன்னைக்கு ஸ்டாப் மீட்டிங் நானா அதுதான் என்று சொல்லிக் கொண்டே சுல்பா தனது ரூமிற்குள் நுழைவதைப் பார்த்து ஒரு கணம் அதிசயித்தேன்.என் தங்கை எவ்வளவு அழகு.ஒரு தந்தைக்குரிய மகிழ்ச்சியில் மீண்டு அவள் எதிர்கால வஸந்ததுக்காக நான் கற்பனை பண்ணத் தொடங்கினேன்.ரூமிற்குள் சென்ற சுல்பாவை இன்னுமே காணமே என்ற நினைவு வர மெதுவாக  எட்டிப் பார்த்தேன். அப்படியே உடையைக் கூட மாற்றாமல் என்ன யோசிக்கிறாள்.என்ன சுல்பா....?ஏன் இந்த யோசனை....ஒரு நாளும் இல்லாத மாதிரி?ஏம்மா ஒரு மாதிரியிருக்கே.என்று அவள் நெற்றியைத் தொட்டுப்  பார்த்தேன்.ஒரு வேளை காச்சலாக இருக்குமோ என்னவோஎன்று ஆனால் அப்படி ஒன்றுமேயில்லை.அவள் தலையை வருடியபடியே ஆறுதலாக மீண்டும் கேட்டேன்.நானா...வந்து ....உன் கிட்ட ஒரு விஷயம்...அதாவது...அவள் தடுமாறியதைப் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டவனாக,தைரியமூட்டி விஷயத்தை வெளிப்படுத்த வைக்கிறேன்.அந்த விஷயம் இனிமையாகவே இருந்தது.ஆம் அவளோடு ஒன்றாகப் படிப்பிக்கும் ஸும்ரி என்னும் ஆசிரியன் இவளைத்  திருமணம் செய்ய விரும்பியதாய் இருந்தான்.இந்த வார்த்தைகளை நானத்துடனே சொன்ன சுல்பாவின் நயனங்களை உற்று நோக்குகிறேன்.வெட்கத்துடன் முகம் சிவக்க அவள் என் முடிவுக்காக என்னைப் பார்க்கிறாள்.நான் கூட இதைப்பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன் சுல்பா.நானாவுக்கு விருப்பம் என்று அவளிடம் கூறுகிறேன்.சுல்பா,ஸும்றியிடம் சொன்னதற்கிணங்க.....அவனின் பெற்றோர் என் வீட்டிற்கு குறித்த தினத்தில் வந்து சேர்ந்தனர்.வந்தவர்களைக் கண்ட என் மனம் ஆச்சரியத்தில் ஸ்தம்பிதமடைய வாருங்கள்........வாருங்கள் என்று அவசரமாக வரவேற்று உபசரித்தேன்.என்னைக் கண்ட அவர்களின் முகங்களில் மலர்ச்சி..........உன் தங்கையா ஸப்ரி ரொம்பவே மகிழ்ச்சி என்று என் தங்கையை அணைத்து மாமி முத்தமிடுகிறாள்...............என் தங்கைக்கு மாமியைப் பற்றியே தெரியாது.ஆம்.அவர்கள் என் தந்தையின் ஒரே ஒரு தங்கை.நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகள் ஓன்று சேர்ந்தாலும்.....பழைய நினைவுகளில் நான் எதுவுமில்லா அனாதையாய் நின்ற காட்சிகள் கண்ணில் தெரிகின்றன.அப்போது அரவணைக்க மறந்த மாமி,மாமா இன்று ஒன்றும் பேசாது அதிர்ந்து நிற்க.....நான் கேட்கிறேன்.மாமி...சீதனமா தங்கைக்கு எவ்வளவு கேட்கிறீங்க? என் வாயை மாமி அவசரமாகப் பொத்துகிறாள் என்ன மகன் ஸப்ரி இது.....சுல்பாவுக்கு .....சீதனமா? என் இரத்தமாச்சேப்பா...........மாமாவும் ஒத்து வருகிறார்.என் எதிர்காலக் கற்பனைகள் இனிதாக நிறைவேறும் என்ற நம்பிக்கையில் திருமண நாளைக் குறிக்கிறோம்.வாழ்த்து இதழ்கள் பரிமாறுவதற்காக வாசலுக்கு வருகிறேன். "நல் வாழ்த்து
                                                                                நான் சொல்வேன்
                                                                                நல்லபடி வாழ்கவென்று........."

என்ற பாடல் வானொலியில் ஒலிக்கிறது.அப்பாடலை ரசித்தவாறே மகிழ்ச்சியோடு விரைந்து நடக்கிறேன்.வீது மஞ்சள் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வாழ்கை மலர்கிறது..........!

டொக்........டொக்.........சத்தம் சிபாவுக்கு நாதமாக ஒலித்ததுக் கொண்டிருந்தது.அவள் மெதுவாக பின் ஹோல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.அங்கே முற்றத்து வளவில் சியானும்,சில்மியும் வெட்மீட்டர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.அதிகமாக காற்றும் வீசுவதால் செட்டிக் கொக் பல திசைகளிலும் பறந்து விழுவதால் சியானுக்கு கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.கோபம் நிறைந்தவாறு பற்களை கடித்துக் கொண்டே பாய்ந்து ஓடி ஓடி அடிக்கிறான்.மெதுவாக அடியுங்கள் என்ற சத்தத்தில் சியான் திரும்பிப் பார்க்கிறான்.அங்கே சிபா அழகான புன்னைகையுடன் கதவின் மேல் கை வைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.ஓ...என்ன இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறீங்க விளையாடுங்களேன்.யார் வெற்றி பெறுகின்றீர்கள் என்று பார்ப்போம்.சிரித்தபடியே சொல்லிவிடுகின்றாள்."என்ன சொல்கின்றீங்க இவ பெரிய மத்தியஸ்தராட்டம்"நான் எதிலும் மத்தியஸ்தானே,நீங்கள் சியான்...என்று இன்னும் எதோ சொல்லப் போனவள்.சிபா எனும் அழைப்புக் கேட்டு சியானின் தாய் சில்மியாவிடம் விரைந்து சென்றாள்.சிபாவுக்கு பதின் ஆறு வயதிருக்கலாம்.வறுமையின் கொடூரப் பிடியில் சிக்கித் தவித்து தன் வயிற்றுப் பசியை போக்க கியாஸ் முதலாளியின் வீட்டில் பணிப்பெண்ணாக சுமார் பத்து வருடகாலமாக வேலை  பார்க்கிறாள்.அவளின் ஏழைத் தாய் இருந்து இருந்து இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை வந்து கியாஸ் முதலாளியிடம் நூறு,இருநூறு வாங்கிக் கொண்டு போவாள்.இதுதான் சிபாவின் சம்பளம்.அவள் வேளைக்கு வந்தபின் பிறந்தவள் தான் கியாஸ் முதலாளியின் மகள் சிறீன்.இப்போது அவசி கூட ஒரு ஆண்குழந்தைக்கு தாயாகிவிட்டாள்.ஆனால் சிபா...?கியாஸ் முதலாளியை அப்பா...என்றும் சிபாவை அண்டி என்றும் அக்குழந்தை செல்ல மொழியில் பேசும் போது சிபாவின் ஆசை அபிலாசைகள் கற்பனையில் தஞ்சமடையும்.நானும் ஒரு செல்வந்தரின் மகளாயிருந்தால் இந்த நிலைக்கு தானே இருப்பேன்....ம்.........ஏழையாகப் பிறந்ததால் தானே இப்படி..........?எல்லா பெண்களுக்கும் குமரிப் பருவத்தில் ஆசைகள் இருக்காதா? ஏழை சிபா ஆசையற்றவளா? உணர்ச்சியற்றவலா?கியாஸ் ஹாஜியாரின் மகளது நிலைமை கண்டு பேறு மூச்சுக்கள் விடுவாள்.பெண்ணாகப் பிறந்தாலும் ஏழையாக என்னைப்போல் யாருமே பிறக்ககூடாது என்று அவளுள்ளம் பிரார்த்தனை புரியும்.அதே நேரம் சீதனத்தை நினைத்தாள்.அவளுள்ளம் மெழுகு போல், உருகி வடியும்.இந்த  நிலையில் அவளது  வாழ்கையில் கூட விரக்தியான மனோபாவமே ஏற்பட்டது.தற்போது நான் சியானின் பாசம் சிபாவின் பக்கம் திரும்பி அவளுள்ளத்தில் இன்பத்தை மாற்றி தூய அன்பின் உறவை ஏற்படுத்திவிட்டது.அவனின் பதவி அவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது."சிபா, சிபா " என்ற சியானின்  குரலைக் கேட்ட சிபா,என்னங்க அழைத்தீர்களா?என புன்முறுவலுடன் கேட்டாள்.ஆம்,"கொஞ்சம் தண்ணீர் கொண்டு தாங்கோ "என்றான்.தண்ணீரை வாங்கி குடுத்து விட்டு சியான் வழமை போல் ஒப்பிஸுக்கு போய் விட்டார்.சிபா குசினிக்குள் வேலை  செய்து கொண்டிருந்தாள்.'எய் சிவா இங்கு வாடி'நான் அடுத்த வீட்டு மாமிக்கு சொன்னேன் அவ இரவைக்கு இங்கு வந்து உமக்குத் துணையாக இருப்பா.சியான் மகன் வந்தால் அவரையும் மாமா வீட்டுக்கு கட்டாயமாக வரச் சொல்லு நாங்க போய் வருவீனம்.வீட்டில் இருங்க மகள் என்று சொல்லிவிட்டு காரின் கதவ மூடினாள்.கார்,முதலாளியையும்,மனைவி,மக்களை ஏற்றிக் கொண்டு விரைந்து சென்றது.நேரம் இரவு 09 மணி,இன்னும் சியான் வீட்டுக்கு வரவில்லை.இப்படி தாமதிப்பதில்லையே.சிபா கற்பனை செய்த படி கதவருகில் அமர்ந்து கொண்டு தன் பார்வை செல்லும் வரை சியானின் வரவை எதிர்ப்பார்த்திருந்தாள்.அடுத்த வீட்டு மாமியோ கும்பகர்ணன் போல் கொரட்டை விட்டு நிம்மதியாக அருகில் இருந்த வெட்டில் படுத்துக் கொண்டார்.சியான் காரை கராஜில் நிறுத்தி விட்டு மெதுவாகப் போய் சிபா என்று அழைத்தான்.ஓ....என்ன இவ்வளவு தாமதம் என்றபடி எழுந்து நின்றாள்.இன்று தாமதிக்க வேண்டிய நிலை வந்து விட்டது என்று அன்புடனே கூறிய படி சிபா கொஞ்சம் வெளியே வாங்களேன் என்றான் .அவள் ஏன்.....?என்று கேட்க பயப்படாதீங்க சிபா சற்று கராஜிக்கிட்ட வாங்களேன் என்று பரிதாபமாக அழைத்தான் .அவளும் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்றாள்."சிபா நான் இன்று உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்.என்னுடன் வரத் தயார் தானே......உங்களை கடைசி வரையும் என்னால் காப்பாற்ற முடியும் சிபா வாங்க நாம் போய் முறைப் படி திருமணம் செய்து கொள்வோம்"என்றான் சியான்."சியான்,உங்கள கெஞ்சிக் கேட்கின்றேன்.உம்மா உங்களை வரச் சொன்னார்.போயிடுங்கோ அவள் கெஞ்சுகிறாள்.உங்களுக்கு கொடுத்த சீதனங்களுடன் மாமா மகளைத் திருமணம் பேசித்தானே போயுள்ளார்.இந்த ஏழையை நீங்க முடித்தாள் பின்னுக்கு வீண் பழிகள் கோன்றாலும் சியான் போங்க....சிபா இங்கு பாருங்க;நான் பணம் அந்தஸ்த்தை நாட வில்லை.உங்களைப் போன்ற ஏழையைத்தான்  நான் விரும்புகின்றேன்.எனது பெற்றோர் பணத்தோடு தன் பணத்தை சேர்க்கப் பார்ப்பார்கள் இப் பணம் எல்லாம் நிலையற்றது.என் பெற்றோர் சீதனப் பேய்கள்.நீங்க என்னுடன் வர வேண்டும்.உங்களைத் திருமணம் செய்வதன் மூலம் தான் என் பெற்றோரது வரதட்சனை கொள்கைகளை முறியடிக்க முடியும் என்றான் சியான்.இரவோடு இரவாக சியான் சிபாவை அழைத்துச் சென்று மார்க்கப்படி திருமணம் செய்து கொண்டான்.திருமணம் பேசி சென்ற கியாஸ் தம்பதிகள் வீடு வந்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.கியாஸ் முதலாளி மதம் பிடித்த யானையைப் போல் இங்கும் அங்குமாக நடையின்று கொண்டிருந்தார்.முதலாளியின் மனைவியோ வாய்க்கு வந்த படி உளறுகின்றாள்.சீ எம் வீட்டு வேலைக்காரியை மனைவியாக்கி விட்டானே.....எமது பணம் என்ன...? நினைத்து நினைத்து கவலை கொண்டாள்.ஊர் எங்கும் சியானின் புகழ் பரவி விட்டது.ஏழைக் கன்னியை கரை சேர்த்து விட்டார்.சிபாவுக்கு நிம்மதியான வாழ்க்கையை சியான் கொடுத்து மனமகிழவைத்த தியாகியாகி விட்டார். இப்படி பல புகழ்கள்.சிபாவுக்கு சொல்லொணா மகிழ்ச்சி எனது வாழ்க்கையின் பெரிய பிரச்சினையொன்று இலேசாக தீர்ந்து விட்டது என்று,சியான்,சிபாவை கரம் பிடித்த வண்ணம் புது வாழ்வை நோக்கிய வாரே மலர்ந்து வதனத்துடன் இல்லற வாழ்க்கையில் இரு மலராகி விட்டார்கள்.ஆம்;இனி அவளுக்கு வறுமைக்கே இங்கு இடமில்லை.இவன் தான் உண்மையான உத்தமன்.