வியாழன், 4 ஆகஸ்ட், 2011

எதிர்பாரத நிகழ்வுகள்..........!

ஹோட்டலில் இருந்து சாப்பாட்டுப் பார்சலுடன் வீடு வந்து சேர்ந்த நான் நேரத்தைப் பார்க்கிறேன்.ஓ......மணி 2 -30 ஆகப் போகிறதே.தங்கை சுல்பாவை இன்னும் காணோமே?வழமையாக இரண்டு மணிக்குமுன் வீட்டில் இருப்பாளே.அவசர அவசரமாகவே வாசலில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் வீதியைப் பார்க்கிறேன்.மனம் பதறுகிறது.சுல்பாவைக் காணவில்லை.இன்னுமொரு அரைமணி நேரம் பார்த்து விட்டு அவளைத் தேடிச் செல்வோம் என எண்ணியவாறு முன் ஹோலிலுள்ள ஈஸிச் செயாரில் சாய்கிறேன்.எனக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கும் தங்கை சுல்பாவைத் தவிர யார் தான் இருக்கிறார்கள்.சுல்பாவைப் பார்க்க முன்னே என் வாப்பா இறைவனடி போய் விட்டார்.அந்தத் துயரில் சுல்பாவை என் கையில் ஒப்படைத்து விட்டு தாயும் காலமாகிவிட்டாள்.அநாதைகளாகி சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்த்தோம்.எமது துரதிர்ஷ்டமோ என்னவோ நான் பத்து வயதை அடைந்த பின் சின்னம்மா விபத்தொன்றில் காலமாக,ஐந்து வயதுத் தங்கை சுல்பாவோடு தனித்து விடப்பட்டேன்.அந்த பத்து  வயதில் இருந்தே நான் அங்கே இங்கே என்று சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்து என் அன்புத் தங்கை சுல்பாவை வளர்த்துப் படிக்க வைத்துப் பூரிப்படைந்தேன்.நான் தான் எத்தனை கஷ்டங்களைச் சகித்திருப்பேன்.வறுமையின் சின்னமாய் சுல்பா வனப்பு மிகு செல்வியானாள்.அவளைப் படிக்க வைத்து ஓர் பட்டதாரியாக்கி..........நான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாமாகச் சேர்த்து இறுதியாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்ற ஆதங்கத்தில் உறுதியோடு உழைத்தேன்.ஆம்......என் கனவுகள் நனவாகின.என் தங்கை படித்து பட்டதாரி ஆசிரியையாகியும் விட்டாள்.இனி என் கனவுகள் எல்லாம் அவளை நல்ல கணவனுக்குக் கைப்பாற்றி  கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனாலும்........கையிலே அதற்குரிய பணமின்றி என் எண்ணத்தில் கீறல் விழுந்தது.பிறரிடம் கை நீட்டாமல் சுயமாக உழைத்து அவளைப் படிக்க வைத்தேன். இன்று சீதனத்துக்காக எப்படி ஆயிரக்கணக்கில் சேர்ப்பேன்.....என்ன நானா.....நான் வந்தது கூடத் தெரியாம ...இவ்வளவு பலமா யோசிக்கின்றீர்களே.......என்கிட்ட சொல்லக் கூடாதா? நீங்க கவலைப் பட்டா......நான் எப்பிடி நானா சிரிப்பேன்? என்ற சுல்பாவின் குரல் கேட்ட நான் அடடே,வந்திட்டியாம்மா....லேட் ஆயிடுச்சே என்று யோசிச்சிட்டிருந்தேன்.ஏம்மா லேட்? சாப்பிடு போய்.இப்ப தான் எனக்கு நிம்மதி.நீ கொஞ்சம் லேட்டா வந்தா இந்த நானா படுற துன்பம் கொஞ்சமா? சிரித்துக் கொண்டே சொன்னேன்.இன்னைக்கு ஸ்டாப் மீட்டிங் நானா அதுதான் என்று சொல்லிக் கொண்டே சுல்பா தனது ரூமிற்குள் நுழைவதைப் பார்த்து ஒரு கணம் அதிசயித்தேன்.என் தங்கை எவ்வளவு அழகு.ஒரு தந்தைக்குரிய மகிழ்ச்சியில் மீண்டு அவள் எதிர்கால வஸந்ததுக்காக நான் கற்பனை பண்ணத் தொடங்கினேன்.ரூமிற்குள் சென்ற சுல்பாவை இன்னுமே காணமே என்ற நினைவு வர மெதுவாக  எட்டிப் பார்த்தேன். அப்படியே உடையைக் கூட மாற்றாமல் என்ன யோசிக்கிறாள்.என்ன சுல்பா....?ஏன் இந்த யோசனை....ஒரு நாளும் இல்லாத மாதிரி?ஏம்மா ஒரு மாதிரியிருக்கே.என்று அவள் நெற்றியைத் தொட்டுப்  பார்த்தேன்.ஒரு வேளை காச்சலாக இருக்குமோ என்னவோஎன்று ஆனால் அப்படி ஒன்றுமேயில்லை.அவள் தலையை வருடியபடியே ஆறுதலாக மீண்டும் கேட்டேன்.நானா...வந்து ....உன் கிட்ட ஒரு விஷயம்...அதாவது...அவள் தடுமாறியதைப் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டவனாக,தைரியமூட்டி விஷயத்தை வெளிப்படுத்த வைக்கிறேன்.அந்த விஷயம் இனிமையாகவே இருந்தது.ஆம் அவளோடு ஒன்றாகப் படிப்பிக்கும் ஸும்ரி என்னும் ஆசிரியன் இவளைத்  திருமணம் செய்ய விரும்பியதாய் இருந்தான்.இந்த வார்த்தைகளை நானத்துடனே சொன்ன சுல்பாவின் நயனங்களை உற்று நோக்குகிறேன்.வெட்கத்துடன் முகம் சிவக்க அவள் என் முடிவுக்காக என்னைப் பார்க்கிறாள்.நான் கூட இதைப்பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன் சுல்பா.நானாவுக்கு விருப்பம் என்று அவளிடம் கூறுகிறேன்.சுல்பா,ஸும்றியிடம் சொன்னதற்கிணங்க.....அவனின் பெற்றோர் என் வீட்டிற்கு குறித்த தினத்தில் வந்து சேர்ந்தனர்.வந்தவர்களைக் கண்ட என் மனம் ஆச்சரியத்தில் ஸ்தம்பிதமடைய வாருங்கள்........வாருங்கள் என்று அவசரமாக வரவேற்று உபசரித்தேன்.என்னைக் கண்ட அவர்களின் முகங்களில் மலர்ச்சி..........உன் தங்கையா ஸப்ரி ரொம்பவே மகிழ்ச்சி என்று என் தங்கையை அணைத்து மாமி முத்தமிடுகிறாள்...............என் தங்கைக்கு மாமியைப் பற்றியே தெரியாது.ஆம்.அவர்கள் என் தந்தையின் ஒரே ஒரு தங்கை.நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகள் ஓன்று சேர்ந்தாலும்.....பழைய நினைவுகளில் நான் எதுவுமில்லா அனாதையாய் நின்ற காட்சிகள் கண்ணில் தெரிகின்றன.அப்போது அரவணைக்க மறந்த மாமி,மாமா இன்று ஒன்றும் பேசாது அதிர்ந்து நிற்க.....நான் கேட்கிறேன்.மாமி...சீதனமா தங்கைக்கு எவ்வளவு கேட்கிறீங்க? என் வாயை மாமி அவசரமாகப் பொத்துகிறாள் என்ன மகன் ஸப்ரி இது.....சுல்பாவுக்கு .....சீதனமா? என் இரத்தமாச்சேப்பா...........மாமாவும் ஒத்து வருகிறார்.என் எதிர்காலக் கற்பனைகள் இனிதாக நிறைவேறும் என்ற நம்பிக்கையில் திருமண நாளைக் குறிக்கிறோம்.வாழ்த்து இதழ்கள் பரிமாறுவதற்காக வாசலுக்கு வருகிறேன். "நல் வாழ்த்து
                                                                                நான் சொல்வேன்
                                                                                நல்லபடி வாழ்கவென்று........."

என்ற பாடல் வானொலியில் ஒலிக்கிறது.அப்பாடலை ரசித்தவாறே மகிழ்ச்சியோடு விரைந்து நடக்கிறேன்.வீது மஞ்சள் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக