சனி, 6 ஆகஸ்ட், 2011

வெள்ளி பூத்து விடியும் வானம்......!

விஸ்மிக்கு தன் மகன் கியாஸின் போக்கு அறவே பிடிக்கவில்லை! எதிர்த்துப் பேசிச் சண்டை போடுமளவுக்கு வளர்ந்து (வந்து)விட்டான்.
எவ்வளவோ புத்திமதிகள் சொன்னாள் விஸ்மி.கியாஸ் செவிமடுக்கவேயில்ல!தந்தை இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது இவ்வளவு தப்பாய்ப்  போயிட்டு... என்று தனக்குள் அழுது கொண்டாள் விஸ்மி.ஆம் விஸ்மி ஓர் அநாதை. தன் கணவன் வெளிநாடு போனவர் அங்கேயே  'நானி' எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு,அந்த ஆசை நாயகியுடன் வாழ்வதால் தனது மனைவி, பிள்ளையை மறந்து விட்டார்.எந்தவித தொடர்புகளுமே இல்லாத கியாஸுக்கு அப்போது ஒரு வயது முடிந்து விட்டது.விஸ்மிக்கு கணவன் துரோகம் செய்த விடயம் தன் ஊர் நண்பர்கள் மூலமாக தெரிந்த போது அவளுக்கு தன் எதிர்கால வாழ்வு வெறும் சூன்யமாகவே பட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் தடு மாறினாள்.தன் சொந்த ஊரில் பேசி வந்த திருமணங்களையெல்லாம் உதறித் தள்ளிய விஸ்மி மிக....மிக....எதிர்பார்ப்புக்களுடன், ஆசைகளுடன்,அன்புடனும் உயிருக்கு உயிராக முஹம்மதை திருமணம் செய்து கொண்ட நா(ள்)ல் இருந்து உற்றார்,உறவினர் என்று யாருமே அற்றவளாகி விட்டாள்.தன் சின்ன மகனுக்காக அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கினாள். அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலே வேலைகள் செய்து வாழ்வை ஓட்டினாள்! கியா(ஸ்)சையும் வளர்த்தாள்! நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தாள்! படிக்க விட்டாள்! எல்லாவற்றையும் விட அன்பை அடைமழையாய் பொழிந்தாள்! செல்லமாய் வளர்த்தாள்! கியாஸ் கேட்ட எதையுமே அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வாங்கிக்கொடுத்தாள். பெரியவனாய் வளர்ந்த பின்னும் கியாஸை ஒரு குழந்தையாகவே எண்ணிச் செல்லம் பொழிந்தாள்! தந்தை இல்லாத குறையே  தெரியாத கியாஸ் தன்னிஷ்டம் போல எதையுமே செய்தான். வளர்ந்து வாலிப வயது வந்த பின் தான் பிடித்த முயலுக்கே மூன்று  கால் என்ற அளவுக்கு வந்து விட்டான். தான் எது செய்தாலும் அது நல்லது என்றே தாயுடன் வாதாடினான்.கெட்ட சிநேகிதர்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்க்கொண்டிருந்தான்.
துப்பாக்கி வேட்டுக்களும்,ஆட்கடத்தல்களும்,கொள்ளைகளும்,வாகன விபத்துகளும்,இயற்கை அழிவுகளும்,விலையேற்றங்களின் தாக்கங்களும் நிறைந்துள்ள கிராமத்துக்குள் வாழும் தன் மகனை நல்ல மனமுள்ள,உதவும் கரமுள்ள பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதே விஸ்மியின் ஆசையும்,எதிர்பார்ப்புக்களுமாகும்.
ஆனாலும் அவளது ஆசைகளும்,எதிர்பார்ப்புக்களும் மண்ணோடு மண்ணாகிப் போயின! விஸ்மியால் இனிமேல் பொறுக்க முடியவில்லை.நன்றாக ஏசிவிட்டாள்!
இதனை எதிர்பாராத கியாஸ்.....ச்சீ....நீயும் ஒரு தாயா.......? என்று கேட்டுவிட்டு....வாய்க்கு வந்தவாறு அவளை ஏசிய வண்ணம் வெளியிறங்கிப் போனான்.
விஸ்மிக்கு அழுகை வந்தது....எவ்வளவு அன்பாக வளர்த்தாள்....எவ்வளவு கஷ்டப்பட்டாள்...? நீயும் ஒரு தாயா..?என்று மகன் கேட்டதை நினைத்து நினைத்து கவலைப்பட்டாள்.......வெளியே சென்ற கியாஸின் காதில் கேட்டது அந்த சொற்பொழிவு..தனது அன்னை வருந்திச் சுமந்து (ஒருவனை) வருந்திப் பெறுகின்றாள் அவனை அவள் சுமத்தலும் பால் மறப்பித்தலும் முப்பது மாதங்களாகும்.
நபி(ஸல்)அவர்கள் ,"சொன்னார்கள் பெற்றோரே ஒரு பிள்ளையின் சுவர்க்கமும், நரகமும்  என்றும்.   
அதாவது  அவர்களுக்கு  (தாய்,தந்தைகளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டு நடந்தால் சுவர்க்கம் நன்றி கெட்டு மாறுசெய்தால் நரகம்.எனச் சொன்னார்கள். ஒருவன் தன் பெற்றோரின் மண்ணறையை ஜியாரத்துச் செய்வானாயின்  அவன் எடுத்து வைக்கும்   ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் நூறு  நன்மைகளை அவனுக்கு எழுதுகின்றான் . பெற்றோரிடம் நன்றியுடன்  நடந்து அவர்களை அன்புடன் நோக்குவானாயின்  அவனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுடைய  நன்மையை அல்லாஹ்  வழங்குகிறான்.இமாம் ஹஸனுள் பஸரீ(ரஹ்)அவர்கள் ஒரு முறை கஃபாவைத் தவாப் செய்து கொண்டிருந்தார்கள்.அது சமயம் ஒரு மனிதன் ஒரு பெரிய பெட்டியைத் தன் தோளின் மீது சுமந்தவனாகத் தவாப் செய்து கொண்டிருந்தான்.அம்மனிதனை விளித்து,'நீ ஒழுக்கக் குறையாக இவ்வளவு பெரிய பெட்டியைச் சுமந்து கொண்டு தவாப் செய்கின்றாயே ஏன்? எனக் கேட்டார்கள்.அப்பொழுது ஒழுக்கக் குறைவுடன் எதையும் செய்யவில்லை பெரியார் அவர்களே!நான் இப் பெட்டியில் தனது வயது முதிர்ச்சியால் தளர்ந்து போன என் அன்னை இருக்கின்றார்கள்.அவர்களால் தவாப் செய்ய இயலாது;அவர்களுக்குப் பகரமாக அக்கடமையை ஆற்றுவதன் மூலம் நான் என் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணி விடையையும்,அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையையும் நான் நிறைவேற்றுவதன்  மூலம்,அவர்களுக்கு நன்றி செலுத்தியவனாகவும் ஆகுவேன் அல்லவா? எனக் கூறினான்..அவன்  கூறியதைக் கேட்ட இமாம் அவர்கள் "நீ கிழக்கிலிருந்து  மேற்குவரை எழுபது  முறை உன்  அன்னையச் சுமந்து  திரிந்துப் பணி விடை செய்த  போதிலும் ,நீ உன் அன்னையின் வயிற்றில் புரண்டிட்ட போது   அவளுக்கு வேதனை ஏற்பட்டிருக்குமே,அதற்கு நிகராக நீ செய்திடும் இப் பணி விடைகள் ஈடாகாது"என்றார்கள்.
"மன்ரலியே அன்ஹு வாலிதா ஹுஃப அன அன்ஹு ராலின்."என்று அல்லாஹ் ஹதீஸ்குத்ஸியில் கூறுகின்றான்.
எவனாவது பெற்றோர்கள் ஒருவனை பொருந்திக்கொள்கிறானோ,நேசிக்கின்றானோ,அவனை நான் பொருந்திக்கொள்கின்றேன்.என்று'
இதனால் தான்"தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கின்றது.முதுமைப் பருவத்தை எத்தி விட்டு பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொள்ளாமல்,அவர்கள் மனம் புண்படும் படி நடந்து கொண்டதன் காரணமாகப் பெற்றோரின் "பதுஆ"விற்கு ஆளான பிள்ளைகள்,இறைவனின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகி விடுவார்களாயின் அவர்கள் சுவர்க்கத்தை அடைவது எளிதான செயலல்ல என்பதாகும்.பெற்றோரின் சொல்லைத் தட்டி நடப்பவன் அல்லாஹ்வை விட்டும்,வானவர்கள் சுவர்க்கம் நல்லோர்கள் அனைவரையும் விட்டும் தொலைவானவன்.
எவன் தாய் தந்தையரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ,அவனின் கையைக் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாக்கப்படும்,"கை வெட்டப்பட்டு விடும்"அவன் சிராத்துல் முஸ்த்தகீம் என்னும் பாலத்தைக் கடக்கு முன்..
"எவன் பெற்றோரை ஏசுவானோ கப்றில் அவனது விலாப்புறத்தில் மழைத் துளிகளைப் போன்று நெருப்புக் கங்குகள் பறக்கும்"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அமைதியான முறையில் மார்க்கப் போதனையை கேட்டு விட்டு கியாஸ்  எழும்பினான்.
மனதில் வேதனைகள் தொடரலானது.ஆம்! தன் தாயை கேவலமாகப் பேசி விட்டேனே என்று!
வீட்டுக்குப் போய் தன் தாயை பார்ப்பதற்காக செல்லும் போது கியாஸின்  கண்களில் பட்டது இந்த காட்சி.
ஆம்! ஒரு ஜனாஸாவை தூக்கிக் கொன்டு கப்ரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.ஜனாஸாவிக்குப்  பின்னால் ஒரு சிறுவன் கதறி கதறி அழுது சென்ற காட்சி அனைவரையுமே அழவைத்தது.யார் மெளதானது என்று தெரியாமல் கியாஸ் ஜனாஸாவோடு சென்ற ஒரு மனிதனிடம் கேட்டான்...."இதோ இவனுடைய தாய் தான்"....உம்மா மட்டும் தான் இவனுக்குத் துணையாக இருந்தாங்க! வாப்பா இல்ல....பாவாம்....இப்ப உம்மாவும் மெளத்தாகி விட்டா...அவன்,இனி யாருமே இல்லையே என்று கத்துறான்...அது மட்டுமல்ல....அவனுக்கு உம்மா மேல சரியான அன்பு! உம்மாவும் மகன்மேல கொள்ளை அன்பு....இப்ப பிரிஞ்சிட்டப்போ இவன் துடிக்காம என்ன செய்வான் தம்பி...? இவ்வளவையும் சொன்ன மனிதன்,அழுது கொண்டு சென்ற சிறுவனை கியாஸுக்கு காட்டினான்.தன் தவறை உணர்ந்தான் கியாஸ்.தாயின் சிறப்பினை நினைத்துப்பார்த்தான்.

பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை!

கண்ணே! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே!
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதம்!

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துவங்க வைத்தாள்! உய்வோம்.

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்.
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்!

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துவங்க வைத்தாள்
தொட்டுப் பேசி துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை!

உதிரந் தன்னைப் பாலாய் உதிர்ந்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்!

கவிதை மனதில் அலையாய் பொங்கியது!எவ்வளவு பாசம் என் அன்னை! நான் எவ்வளவு துன்பப்படுத்திட்டேன்,என்று நினைத்து கியாஸ்,உடனடியாக வீட்டுக்கு ஓடி உம்மாவைப் கட்டிப் பிடித்துத் துன்பம் தீரும் வரை அழுதான்.இது வரை செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்...தாயின் உள்ளம் குளிர்ந்தது!மகனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் விஸ்மி.........!
                                                                                                                

2 கருத்துகள்:

  1. மார்க்க சிந்தனைகள் விரவிய எளிமையான கதை. எனக்கு பிடித்தது. வாழ்த்துக்கள்.சகோதரி.

    கே.எஸ்.பாலச்சந்திரன்

    பதிலளிநீக்கு
  2. அண்ணா உங்கள் வாழ்த்துக்களை பெற நான் கொடுத்து வைத்தவள் மிகவும் சந்தோசப் படுகின்றேன் நன்றி அண்ணா என் நிழல்களாக ...!

    பதிலளிநீக்கு