வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வாடிய ஓர் மலையகச் செடி மலர்ந்தது....

தேயிலைச் செடிகளின் பக்கத்தில் அந்தப் பெண்கள் குந்திக் கொண்டிருந்தார்கள்.கூடையைத் தோளிலே வைத்துக் கொண்டு முனியம்மா தீடிரென எழுந்தாள்.குடத்தை கீழே இறங்கி வைத்துக் கொண்டு முனியம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அன்னம்மா,இவள் எழுந்து நிற்பதைப் பார்த்து குடத்தை  இடையில் வைத்தவளாய் தானும் எழுந்து கொண்டாள்.வானின் நீலவர்ணத்தைக் கண்டு பொறாமைப் பட்டாற் போல ஒரு கருமுகிற் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருந்தது.இதைப் பார்த்த முனியம்மாவுக்கு நெஞ்சு திக்கென்றிருந்தது.வீட்டு நினைவு வரவே அவள் அன்னம்மாவுடன் கதைப்பதை நிறுத்தி விட்டு எழுந்து கொண்டாள்.கடவுளே பெரிய மழை வரப்போகிறதே;என் பிள்ளைகளை நீதான் காப்பாத்தனும் என்று கலங்கிய கண்களுடன் தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.முன்னே தோட்டத்துரையின் பெரிய பங்காள பளிச்சிட்டது அதைப் பார்த்ததும் பேறு மூச்செறிந்த முனியம்மா வெறும் மண் குடிசை கூட இருந்தும் தமக்கு அவை உருப்படியாக இல்லாமல் இருக்கிறதே என்று ஏங்கினாள்.இந்த மழை வந்தாள் வீடு வெள்ளமாய்ப் போகும் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக வா;அன்னம் போகலாம் என்று அழைத்தாள்.முனியம்மா;நீ பிள்ளைகளை நினைத்துக் கவலைப்படுகிறாயா?இந்த லயன்களில் எல்லாக் குடும்பமும் இந்த வர்ணபகவானின் அருளைப் பெறத்தான் வேண்டும்.மழை வந்தாள் நீ மட்டுமா உன் பிள்ளைகள் மட்டுமா?எத்தனை ஓட்டைகள் குடிசைகள்?பெரு மூச்சு விட்டாள் அன்னம்மா: நான் கூட தொழில் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தோட்டத்தில் ஒரு கூலி வேலைக்காக எத்தனை துயரப்பட்டிருந்தேன். நாம் ஏழைகள் தானே முனியம்மா என்று ஆறுதல்படுத்தி நடந்து கொண்டிருந்தாள்.இல்ல அன்னம் வீட்டில பிள்ளைகள் பட்டினி அதோட மழையும் வந்து முடிக்க முடியாமல் முனியம்மாவின் குரல் தள தளக்க கண்களும் கலங்கியது அன்னம்மாவுக்கு மனதை வேதனை கவ்வியது தன்னைப் போல ஒரு ஏழை படும் பாட்டை அவளால் உணர முடிந்தது.தன்னருகே முந்தானையால் கண்களைத் துடைத்த படி வந்த முனியம்மாவை தேற்றினாள்; முனியம்மாவின் கண்ணீரைக் கண்டோ என்னவோ கூடி வந்த கருமுகில்களைக் காற்று கலைத்து வானத்தைப் பழையபடி நீல நிறமாக்கிக் கொண்டிருந்தது.மழை சாடையான தூறலுடன் நின்று விட்ட மகிழ்ச்சியில்  இருவரும் தோட்டத்தில் இருந்த ஒத்தாப்பில் அமர்ந்தனர்.அப்போது தான் ஒரு குடிகாரன் மிக்க போதையில் வெறியோடு தள்ளாடித் தள்ளாடிக் கொண்டே வந்தான்.அன்னம்மாவினால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.அதோ பார்த்தியா அன்னம் அவன் தான் என் புருஷன் என்று முனியம்மா சொல்லவும் அவளால் இவளின் பரிதாபத்தைப் பார்க்கவே முடியவில்லை.தினமும் இப்படியே இவன் குடிச்சிட்டு வாரான்.கொழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்க அஞ்சு காசுக்கு வழியில்லாம நேத்து ராத்திரிக்கு முதல் ராத்திரி பக்கத்து வீட்டு பார்வதிகிட்ட பத்து ரூபா கடனைக் கேட்டேன்.அவ புருஷன் நேத்து அத வாங்கிட்டு வாடின்று பார்வதியை அடிச்சிருக்கான்.நான் என்ன பண்ணுவேன்னு தெரியல்லயே இவன் ஒரு புருசனா என்று புலம்பினாள் முனியம்மா.துரையின் தோட்டத்தில் எதாவது வேலை கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருவரும் வெகு நேரமாக தோட்டத்தில் குந்திப் பேசிக் கொண்டிருந்தனர்.நீண்ட நேரங்களுக்குப் பின்னே கங்காணி வந்து அவர்களை அழைத்தான்.மிகவும் மகிழ்ச்சியுடன் ஓடினால் முனியம்மா.அவளைத் தொடர்ந்தாள் அன்னம்மா.கங்காணி சொல்லிய அந்த வேலையைச் செய்யத் தயங்கினார்கள்  இருவரும் இது எவ்வளவு சிரமம்.ஒரு மணித்தியாலத்துக்குள் ஆண்களாலேயே செய்ய முடியாத வேலையை நாம் எப்படிச் செய்வது?யோசித்தபடியே 'என்ன கங்காணி......ஆண்கள் செய்யும் இந்த வேலையை அதுவும் ஒரு மணித்தியாலத்திற்குள் எப்படிங்க செய்வோம்?அவர்கள் கேட்டனர்.உண்மையிலே கங்காணி சொன்னா வேலை மிகவும் கஷ்டமானது தான்.அவனின் பங்களாவைக் கழுவி சாமான்களெல்லாம் ஒரு ரூமிற்குள் வைத்துவிட்டு விரைவில் தண்ணீரின்றிக் காய்வதற்கு வசதியாக நிலத்தைத் துடைக்க வேண்டும்.'ம்.......அப்பாடி'பெருமூச்சுவிட்டாள் அன்னம்மா.முனியம்மாவுக்கு பார்வதியிடம் வாங்கிய கடனையாவது கொடுக்கலாமே என்கின்ற ஆவல்.கணக்கப்பிள்ளை தங்கராஜா விரைந்து வந்தவர் கங்காணியை  பார்த்து வேறு ஆண்களை இந்த வேலைக்கு அனுப்பி விட்டு இந்தப் பெண்கள் இருவரையும் புதிய மலைக்கு அனுப்பு கொழுந்துல நேர ரொம்ப மோசம்.பிச்சி புடுங்கி உள்ளது என்றார்.இருவருக்கும் பாரச்சுமை கழிந்தது.விரைவாக கொழுந்துகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார்கள்.மூன்று மணிக்குத் தொடங்கிய வேலைகள் ஐந்து  மணியைத் தாண்டியும் ஒரு பத்து நிமிஷத்தையும் சேர்த்துக் கொண்டது.தலை கனக்கக் கொழுந்து கொண்டு வந்து இருவரும் கொட்டினார்கள்.குறைந்தது முப்பது கிலோவாவது இருக்கும்."இருந்தா துண்டு;கனக்கப் பிள்ளையிடம் கொடுத்து சம்பளத்தை வாங்கிக் கொண்டுபோங்கள் என்றார் கங்காணி.சம்பளப் பணம் கிடைத்தது.ஆளுக்கு முப்பது ரூபாய்."இது என்ன அநியாயம் கணக்குப் பிள்ளை?"என்று பதறினாள் முனியம்மா .என்ன ஒருவருக்கு பத்து கிலோ அவளுக்கு எல்லாம் இருவது கிலோ கூறியபடி கணக்குப்பிள்ளை என்றார்.வேலைக்கு ஏற்ற பணம் தந்திருக்கு என்று போய்விட்டார்.அவரைப் பின் தொடர்ந்து காலில் விழாத குறையாய் இன்னும் பத்து பத்து ரூபாய் கொடுக்கும்  படியும் ,நிறை சரியாக நிறுத்தி தராசைப் பார்க்காமல் துண்டு கங்காணி தந்த தாகவும் இருவரும் வாதாடினார்கள்.......இல்லை கெஞ்சினர்.கங்காணி மசியவில்லை. முனியம்மாவின் கண்கள் கலங்கின.அப்பணத்தைப் பட்ட கடன் கொடுபதா? சாப்பிடுவதா என்று அவளால் நிர்ணயிக்க முடியவில்லை.அன்னம்மாவின் கணவனும் உழைப்பதனால் அவளுக்குக் குடும்பச் செலவு தெரியவில்லை என்றாலும் அவளும் வறுமையைச் சந்திப்பவள் தான்.ஆனாலும் தன் தோழி முனியம்மா படும் துயரத்தைக் காணச் சகியால் தனக்குக் கிடைத்த பணத்தையும் கொடுத்து "முனியம்மா,நீ இதைப் எப்போதாவது திருப்பித்தா.........ஏழைகளை ஏழைகளால்தானே புரிய முடியும்.உன் குழந்தைகளுக்கு சமைச்சிப் போடு" என்று பெரிய மனதோடு முப்பது ரூபாவைக் கொடுத்தாள்.முனியம்மாவினால் அந்த உதவியை மறக்க முடியவில்லை.நன்றி கலந்த பார்வையுடன் அன்னம்மாவைப் பார்த்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக